நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகத்தில் ஏற்பட்ட கல் அடைப்பு காரணமாக அமைந்தகரை பில்ரோத் தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
மன்சூர் அலிகானிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்தது. இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சைக்கான மருத்துவ ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மன்சூர் அலி கான் எண்ணற்ற திரைப்படங்கள் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த அவர் , பின் தேர்தல் போட்டியில் இருந்து விலகினார். தமிழ் தேசிய சிந்தாந்தங்களில் தீவிர பற்றுக் கொண்ட அவர், நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார், பின்னர், அந்தக் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
முன்னதாக, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக, மன்சூர் அலிகான் மீது சென்னை மண்டல அதிகாரி புகார் கொடுத்ததை அடுத்து, அவர் மீது வடபழனி போலீஸார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சென்னை மாவட்ட நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அப்போது, தடுப்பூசி குறித்து புரளி பரப்பக்கூடாது மற்றும் பதற்ற நிலையை உருவாக்கக்கூடாது என்று அறிவுறுத்தி மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. மேலும், கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு ரூ.2 லட்சத்தை சுகாதார செயலர் பெயரில் டிடியாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தமிழ் திரையுலகினருக்கு போதாதா காலம்:
இந்த 2021ம் தமிழ் திரையுலகினருக்கு போதாதா காலமாக மாறியுள்ளது. பல சினிமா கலைஞர்கள் பலரும் பல்வேறு நோய்களாலும், கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர்.
முன்னதாக, பிரபல திரைப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் திடீரென நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்தார். பிரபல காமெடி நடிகர் பாண்டு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். ரெட்டச்சுழி, ஆண் தேவதை போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் தாமிரா (காதர் முகைதீன்) கொரோனா நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகானுக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால், அவரது ரசிகர்களும், அரசியல் உறவுகளும் நிம்மதி பெருமூச்சில் உள்ளனர். அவர், விரைவில் நலம் பெற்று விடு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் காணப்படுகிது.