ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என பா.ம.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் யாருக்கும் ஆதரவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், ”தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் கூடி விவாதித்தது. கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
‘‘ இடைத்தேர்தல்கள் தேவையற்றவை; மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை. அதனால் தான் சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ, கட்சித் தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அங்கு இடைத் தேர்தல் நடத்தத் தேவையில்லை; அங்கு பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம்’’ என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதையே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
அதன்படியே ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.