தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் உள்ளிட்ட 20  மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 7ஆம் தேதி வரை மழை இருக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இன்று அதாவது ஏப்ரல் நான்காம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 
 
மேலும் நாளை முதல்   வரும் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது /  மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்து இருந்தது. 


இந்நிலையில் தற்போது, அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்ட்டில் உள்ள வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதாவது, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை, மதுரை, சிவங்கங்கை,  விருதுநகர், புதுக்கோட்டை, தொன்காசி , கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மொத்தம் 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  


மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை காலம் தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்த காரணத்தால் பூமியின் உஷ்ணம் சற்று குறைந்து இருந்தது. ஆனால் அதனையடுத்து தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் பயங்கரமாக உள்ளது. நேற்றய தினம் ஈரோட்டில் அதிகபட்சமாக 39.4 டிகிரி செல்சியஸாக பதிவானது. அதாவது 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை மற்றும் வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை 35.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அடுத்த மாதம் கத்திரி வெயில் தொடங்கும் நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கத்திரி வெயில் இன்னும் தொடங்காத நிலையில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் நண்பகல் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.