6வது முறையாக தனியார் பால் தயிர் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 


இதுதொடர்பாக பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தி மற்றும் விற்பனை துறையில் ஈடுபட்டு வரும் அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நிலையில் அந்நிறுவனங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லாததும், தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வராததாலும் 2023நடப்பாண்டில் 2வது முறை மீண்டும் பால் லிட்டருக்கு 2.00ரூபாயும், தயிர் ஒரு கிலோவிற்கு 8.00ரூபாயும் உயர்த்தி அமுல்படுத்தி பொதுமக்கள் மீது தொடர்ந்து பெரும் நிதிச்சுமையை சுமத்தி வருவதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.




கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்ட போது பால் வணிகமும் பாதிப்பை சந்தித்தது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனியார் பால் நிறுவனங்களும் பால் கொள்முதல் விலையை வரலாறு காணாத வகையில் குறைத்தன. குறிப்பாக ஒரு லிட்டர் பாலினை 18.00ரூபாய் வரை மட்டுமே பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையாக வழங்கி கொள்முதல் செய்து அதனை பால் பவுரடாக்கி, வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதித்தன. ஆனால் பொதுமக்களுக்கான விற்பனை விலையில் சிறிதளவு கூட குறைக்க முன் வராததோடு, பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்களுக்கான லாபத்தைக் கூட அந்த காலகட்டங்களில்  உயர்த்தி வழங்கவும் சம்பந்தப்பட்ட தனியார் பால் நிறுவனங்கள்  முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அதன் பிறகு கொரோனா நோய் பெருந்தொற்று கால ஊரடங்கு முடிந்து இந்தியா முழுவதும் இயல்புநிலை  திரும்ப தொடங்கி, பால் வணிகமும் சீரடையத் தொடங்கியதும் 2022ம் ஆண்டில் ஒவ்வொரு தனியார் பால் நிறுவனங்களும்  தங்களுக்கான பால் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக ஏற்கனவே 2020, 2021ல் கடுமையாக குறைக்கப்பட்ட பால் கொள்முதல் விலையை கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி கிள்ளி கொடுக்கத் தொடங்கி கொரோனா காலகட்டத்திற்கு முன்பிருந்த நிலையான ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 38.40ரூபாய் (அதாவது ஒரு Total Solids 3.20×12TS (4%Fat 8%SNF) என்கிற நிலைக்கே தற்போது தான் வந்துள்ளன.


ஆனால் கொரோனா கால ஊரடங்கு முடிவிற்கு வந்த பிறகு ஒவ்வொரு தனியார்பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை மட்டும் கடுமையாக உயர்த்தி ருத்ரதாண்டவமாடி வருகின்றன. காரணம் தமிழக அரசு மாநில அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினை கண்டு கொள்ளாததாலும், ஆவின் நிறுவனம் வீழ்ச்சியை நோக்கி செல்வதாலும் தனியார் பால் நிறுவனங்கள் வைப்பது தான் சட்டம் என்கிற நிலை தமிழகத்தில் இருப்பது வேதனைக்குரிய விசயமாகும்.


அதே சமயம் தனியார் பால் நிறுவனங்களின் சர்வாதிகார போக்கினை தடுக்க வேண்டிய மாநில அரசோ தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என கைவிரித்து தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. மத்திய அரசோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியும் கண்டு கொள்ளாத செயலை மக்கள் விரோத செயலாகவே தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் பார்க்கிறது. 


நினைத்த போதெல்லாம் பால் கொள்முதல் விலையை குறைத்து பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது, அடிக்கடி விற்பனை விலையை உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய நிதிச்சுமையை சுமத்துவது என தங்களின் சுயநலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பொதுமக்கள் நலன் மீது கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத அனைத்து தனியார் பால் நிறுவனங்களுக்கும், அவற்றை கட்டுப்படுத்த தவறிய தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. 


மேலும் தனியார் பால் நிறுவனங்களின் மக்கள் விரோத, தொடர் பால் விற்பனை விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்தவும், பால் கொள்முதல் விலையை நியாயமான அளவில் தமிழக அரசே நிர்ணயம் செய்யவும், வெளிநாடுகளுக்கு பால் பொருட்கள் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கவும் மத்திய அரசிடம் உள்ள அதிகாரத்தை மாநில அரசு பெறக் கூடிய வகையில் நடைபெற்று கொண்டிருக்கும் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாளை (05.04.2023) நடைபெற இருக்கும் பால் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் போது அதற்கான சட்டமியற்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது. 


தனியார் பால் விற்பனை விலைப்பட்டியல்.


இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk) பழைய விலை 50.00 - புதிய விலை 52.00


சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) பழைய விலை 52.00 - புதிய விலை 54.00


நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) பழைய விலை 64.00 - புதிய விலை 66.00


நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) பழைய விலை 72.00 - புதிய விலை 74.00


தயிர் (TM Curd) பழைய விலை 70.00 - புதிய விலை 78.00