தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  கடந்த 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் மழை என்பது குறைவாக தான் இருக்கும் ஆனால் இந்த ஆண்டு 400 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் , சென்னையில் ஜூன் மாத மழை 295 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் பெய்யக்கூடிய அதிகபட்ச மழையின் அளவு என்பது 4 செ.மீ ஆகும். ஆனால் கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. நேற்றைய முன்தினம் சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ மழை பதிவானது. நேற்று சுமார் 6 செ.மீ வரை மழை பதிவானது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு ஜூன் மாதம் 295 சதவீதம் சென்னைக்கு அதிக மழை கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (மில்லிமீட்டரில்)


புதுச்சேரி விமான நிலையம்  34.0, கொடைக்கானல் (திண்டுக்கல்) 28.0, திருச்சிராப்பள்ளி விமான நிலையம் 13.0, கோயம்புத்தூர் விமான நிலையம் 0.7, சென்னை நுங்கம்பாக்கம் 3.9,  சென்னை விமான நிலையம் 0.8, வேலூர் 12.0, குன்னூர் (நீலகிரி) 11.0, உதகமண்டலம் (நீலகிரி) 11.0, திருத்தணி (திருவள்ளூர்) 10.0, திருப்பத்தூர் 3.0, வால்பாறை (கோவை) 1.0, எண்ணூர் துறைமுகம் (சென்னை) 27.0, மாதவரம் (சென்னை) 8.0, கோவில்பட்டி (தூத்துக்குடி) 7.5, பெரியகுளம் (தேனி) 6.5, திருப்பதிசாரம் (கன்னியாகுமரி) 0.5, அருப்புக்கோட்டை (விருதுநகர்) 5.5 மிமீ அள மழை பதிவாகியுள்ளது.  


இதனால் மீனவர்களுக்கும் வரும் 24 ஆம் தேதி வரை வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24  மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். நேற்று இரவு முழுவதும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.