தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் காலை 8.30 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய  காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு  வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 02-12-2023 வாக்கில் புயலாக வலுப்பெற கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக இன்று காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,  மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம்  மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2 ஆம் தேதி புயலாக் வலுபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நேற்று சென்னையில் காலை வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில், சிறிது நேரத்திலேயே நிலைமை தலைகீழாக மாறியது. நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று மாலை நேரத்தில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 


எழும்பூர், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர், வடபழனி, கோடம்பாக்கம், வியாசர்பாடி, பெரம்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.  அதேபோல சென்னை புறநகரப் பகுதிகளான தாம்பரம், செம்பரம்பாக்கம், திருவேற்காடு, குன்றத்தூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சுமார் 4 மணி நேரத்திற்காக மேலாக விடாமல்  மழை பெய்தது.  இதனால் சென்னையில் ஒரே நாளில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


பதிவான மழை அளவு: (மில்லிமீட்டரில்)


புழல் (திருவள்ளூர்) 118.5, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 106.5, நந்தனம் (சென்னை) 103.0, கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) 95.0, தரமணி (சென்னை) 83.5, சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 70.5, பள்ளிக்கரனை (சென்னை) 61.2, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 47.5, மீனம்பாக்கம் (சென்னை) 96.4, நுங்கம்பாக்கம்  (சென்னை) 79.0, பரங்கிப்பேட்டை (கடலூர்) 26.0, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 21.0, பாம்பன் (ராமநாதபுரம்) 21.0, தொண்டி  (ராமநாதபுரம்) 21.0, கடலூர்  19.0, நாகப்பட்டினம் 17.0 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.