நீங்க ரோடு ராஜாவா?  என்ற திட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சாலை விதிமுறைகளை மீறியதாக பொதுமக்கள் 127 வாகன ஓட்டிகளை புகைப்படம் எடுத்து புகார் அளித்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Continues below advertisement

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் நடுவில் உள்ள கம்பங்களில் போக்குவரத்து காவல்துறையினரால் ‘நீங்க ரோடு ராஜாவா..?’ என்ற அச்சிடப்பட்ட குட்டி பேனர் ஒன்று நெடுதூரம் வைக்கப்பட்டிருந்தது. இது காவல்துறையினரால் ஏன் வைக்கப்பட்டது..? எதற்காக வைக்கப்பட்டது..? என்று குழப்பம் மக்கள் மத்தியில் நீடித்து வந்தது. ஆனால் இந்த பேனர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதாவது மக்கள்  சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றவே இந்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான காணொலி வீடியோக்களை அதன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. அதில், சாலை விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் @RoadRaja என பயன்படுத்தி பதிவு செய்தால் உடனடியாக அந்த நபரை அடையாளம் கண்டு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

Continues below advertisement

பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த செயல்பாட்டின் மூலம், தற்போது வரை 127 வாகன ஓட்டிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெறப்பட்ட புகார்களில் 81 புகார்கள் நியாயமானதாக இருந்ததாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. நீங்க ரோடு ராஜாவா? என்று டேக் செய்து வந்த புகார்களில் சாலை விதிகளை மீறியதாக 81 பேர் மீது அபராதம் விதித்து செலான் அனுப்பப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

நீங்க ரோடு ராஜாவா என்ற திட்டம் சாலை விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்குபவர்களை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து @roadraja என்று டேக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் போக்குவரத்து போலீசார் உடனுக்குடன் அபராதம் விதிக்கும் முறை சென்னை போக்குவரத்து போலீசாரால்  ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. சாலை விதிமீறல் அல்லது சாலை பாதுகாப்பபு குறைபாடு காரணமாக ஆண்டுதோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகிறது. பலரும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதனால் சாலை பாதுகாப்பை உறுதி செய்ய பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.