9 மாவட்டங்கள்:


தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி  ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


17.08.2023 முதல் 21.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


16.08.2023: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (மில்லிமீட்டர்)


நுங்கம்பாக்கம் 16.0, திருச்சிராப்பள்ளி 0.5, மதுரை விமான நிலையம் 1.0, எண்ணூர் (சென்னை) 1.5, நுங்கம்பாக்கம் (சென்னை) 12.0, மாதவரம்(சென்னை) 1.0, சிறுமணி (திருச்சி) 17.0, திருப்பூர் (திருவள்ளூர்) 4.0, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்)  0.5 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்று தணிந்துள்ளது. ஆனாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 


தென்மேற்கு பருவமழை பொறுத்தவரையிலும் இயல்பான மழை அளவை விட ஆறு சதவீதம் இந்த ஆண்டு அதிகமாக ஜூன் 1 தேதியிலிருந்து தற்போது வரை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை பொறுத்த வரையிலும் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 153 மில்லிமீட்டர் மழை ஆகும். இது இயல்பை விட 6  சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என தெரிவித்தார். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


தமிழக கடலோரப்பகுதிகள்:


16.08.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


வங்கக்கடல் பகுதிகள்:


16.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.