தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு ஒருநாள் முன்பு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் விடுதிக் காப்பாளர் தன்னை துன்புறுத்தி வந்ததாக குறிப்பிடிருந்தார். இதனடிப்படையில், விடுதிக் காப்பாளரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


 


இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக தேசிய மாணவர் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீடு முன்பாக போராட்டம் செய்துள்ளனர். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ட்வீட் செய்துள்ளார். 


 






அதில், “தேசிய மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிதி திரிபாதி, முத்துராமலிங்கம் மற்றும் ஹரிகிருஷ்ணா ஆகியோர் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வீடு முன்பாக போராட்டம் செய்தனர். தஞ்சை மாணவிக்காக அவர்களின் போராடும் ஆற்றல் நம்மை மிகவும் எழுச்சி அடைய செய்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். 


 


முன்னதாக இன்று காலை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது தந்தைக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் 4 வாரத்தில் தந்தை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 


மேலும், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற கிளைக்கு ஆணைக்கு தடையில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். பள்ளி மாணவி மரண விவகாரம்  வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் செய்தது. இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிமன்றம் இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசு கெளரபிரச்னையாக பார்க்க வேண்டாமென தெரிவித்தது.


மேலும் படிக்க: கௌரவ பிரச்னையாக பார்க்காதீர்கள் - தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் அட்வைஸ்