பல தலைமுறையாக காட்டுப்பகுதிகளை வாழ்விடமாக கொண்டு, வேட்டையாடி பிழைப்பு நடத்திவந்த பழங்குடி இருளர் மக்கள், வேட்டையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டபோது ஊர் ஓரத்தில் குடிசையமைத்து, பாம்பு எலி பிடிக்கும் வேலைகளில் ஈடுப்பட்டனர். இதில் போதிய வருமானம் கிடைக்காது என்பதால், இன்று வரை பல பழங்குடி இருளர்கள் கொத்தடிமைகளாக செங்கல் சூளை, ரைஸ் மில், மரம்வெட்டும் தொழில், ஆடு மாடு மேய்த்தல் மற்றும் விவசாய நிலங்களில் இரவுக் காவலர்களாக பயன்படுத்தப்படுகின்றனர் .
தமிழ்நாட்டில் மொத்தம் 427 இனப்பிரிவு மக்கள் விழுவதாக ஒரு கணக்கெடுப்பு உள்ளது. இருளர் உள்ளிட்ட பழங்குடியினர் 36 பிரிவுகளாகவும், தாழ்த்தப்பட்டோர் 76 பிரிவுகளாகவும் உள்ளனர். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ் நாட்டில் பழங்குடி இருளர் இன மக்கள் மொத்தம் 1,89,661 பேர் வாழ்ந்து வருகின்றனர். இதில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு, சாதிச் சான்று , குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த அரசு சான்றிதழ்களும் இல்லாமல் தங்குவதற்கு சொந்த வீடுகள் இன்றி , ஆற்றங்கரை ஓரம், ஊர்களை ஒட்டிய காட்டுப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இன்று வரை பல்வேறு சாதி ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்
திண்டிவனம் பகுதியை சேர்ந்த எழுத்தாளர் முருகப்பன் ராமசாமியை தொடர்புகொண்டபோது “கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சென்ற ஆண்டு முதல் உலகின் பொருளாதாரம் தொடங்கி, மனித உயிர் இழப்புக்கள் வரை பல்வேறு பாதிப்புகள் அடைந்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள பழங்குடி இருளர் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் தொலைத்துள்ளனர் .
குடும்ப அட்டை இல்லாத காரணத்தால் தமிழக அரசு அறிவித்துள்ள 4000 கொரோனா உதவி தொகை மற்றும் வேறு பல சலுகைகள் முழுமையாக தங்களுக்கு கிடைக்காதோ என்ற அச்சத்தில் உள்ளனர் பழங்குடி இருளர் மக்கள் என்று கூறினார் ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த சங்கர், (50) என்ற பழங்குடி இருளரிடம் பேசிய போது , எனக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவியும், 9 பிள்ளைகளும் உள்ளனர். என்னைப்போன்ற இன்னும் 4 இருளர் குடும்பங்கள் திண்டிவனம் - மேல்மருவத்தூர் நடுவே அமைந்திருக்கும் ஒலக்கூர் கிராம ஏறி கரை ஓரம் கோட்டை அமைத்து தங்கிவருகிறோம். தினக்கூலிகளான நாங்கள் , மரம்வெட்டும் தொழில் மற்றும் மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று வருகிறோம் .
சென்ற ஆண்டு கொரோனா தொடங்கிய காலம் முதல், வேலைவாய்ப்பு எதுவும் இல்லாமல் வறுமையில் வாழ்கின்றனர் . எங்களை போல அதிக இருளர் இன மக்கள் குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த அரசு சான்று இல்லாததால், அரசு வழங்கும் இலவச அரிசி கூட பெற முடியாமல், பட்டினியில் வாழ்ந்து வருகிறோம். எனவே அரசு எங்களுக்கு தகுந்த உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
பழங்குடி இருளர் மக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பேராசிரியர் பிரபா கல்விமணியை தொடர்புகொண்டபோது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கி இருக்கும் பழங்குடி இருளர் மக்கள் , சமீப காலங்களில்தான் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு உதவியாலும் கொத்தடிமை முறையில் இருந்து மீண்டு வருகின்றனர் . பெரும்பான்மையானவர்களுக்கு இன்னும் சாதி சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் குழந்தைகள் கல்வி முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது .
மேலும் குடும்ப அட்டையை மையமாக கொண்டு அரசு வழங்கும் சலுகைகள் இவர்களுக்கு சில தளர்வுகள் ஏற்படுத்தி , கிராம நிர்வாக அலுவலர் , பஞ்சாயத்து உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் கொண்டு கணக்கிட்டு உரிய விவரங்களை முழுமையாக கொண்டு சேர்க்கமுடியும் என்று கூறினார் .