இதுதொடர்பாக செய்தித்தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் கோகுல்ஸ்ரீ  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி  அன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, சிறுவனின் தாயார் பிரியாவிற்கு இழப்பீடாக 7.5 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவியாக ரூபாய் 2.5 லட்சம் ரூபாய் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்கி ஆணையிட்டுள்ளார்.  மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் ஆறுபேர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.


 இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயார் பிரியாவிற்கு  தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதியில் தற்போது கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பினை ஒதுக்கீடு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார்.


இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் மரணம்:

 

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள கன்னடபாளையம் குப்பை மேடு பகுதியை சேர்ந்த, 17 வயதான கோகுல் ஸ்ரீ ரயில்வே பேட்டரி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் அடைக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் கோகுல்ஸ்ரீயின் தாயார் பிரியாவிற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட சிறப்பு இல்ல காவலர்கள், தங்களின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்த காவலர்கள் மிக மோசமான நிலையில் மகன் இருப்பதாகும் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போலீசார் மகன் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். வலிப்பு வந்ததால் சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோரிடம் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

 


"மகன் சாவில் மர்மம்"

 

இதனையடுத்து, தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக  கூறி தாய் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் நீதிமன்ற காவலில் இருந்த சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீசார் 176(1)(A) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்ற காவலில் இருந்த சிறுவன் உயிரிழந்த காரணத்தினால் , நீதிபதி விசாரணையை தொடர்ந்தார்.

 

6 பேர் கைது:

 

விசாரணையின் முடிவில், சிறுவர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் மோகன், பணியில் இருந்த காவலர்கள் சந்திரபாபு ,வித்யாசாகர், சரண்ராஜ், ஆனஸ்ட் ராஜ், விஜயகுமார் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

 


சீர் நோக்கு இல்லத்தில் நடந்தது என்ன ?

 

ஏற்கனவே, சிறை வந்து  சென்ற கோகுல் ஸ்ரீ சற்று திமிராகவே அந்த இல்லத்தில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் அங்கிருந்த பிரம்பை கொண்டு கோகுல் ஸ்ரீயை தொடர்ந்து தாக்கி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வலி தாங்காத சிறுவன், காவலர் ஒருவரின் கையை கடித்துள்ளார். இதனால், மேலும் ஆத்திரமடைந்த  சிறை வார்டன் மற்றும் காவலர்கள் கோகுல் ஸ்ரீயை கண்மூடித்தனமாக தாக்கியதில் , வலது ,கை மற்றும் இடது கை பகுதிகள், வாய் , பின்புறம் ,முதுகு, தொடை, குதிகால் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக, உடலில் பல இடங்களில் ரத்தம்கட்டி துடித்து சிறுவன் உயிரிழந்துள்ளார். இதிலிருந்து, தப்பிப்பதற்காகவே சிறுவனுக்கு வலிப்பு வந்து விட்டதாக காவலர்கள் நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது.

 

இதுதொடர்பாக ABP நாடு செய்தி வெளியிட்ட நிலையில், உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்த முதலமைச்சர், தற்போது கோகுல்ஸ்ரீயின் தாயாருக்கு நிவாரணமும், குடியிருப்பும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.