பொதுவாக எந்தவொரு துறையிலும் ஒருவரின் வயது கூடக்கூட அவர்களுக்கான தேவையும் வாய்ப்பும் குறையும். ஆனால் மருத்துவத் தொழிலுக்கு மட்டும் இது பொருந்துவதில்லை. அந்த வகையில் 70 ஆண்டுகளாக, கொள்ளுப்பாட்டி, தாத்தா, அப்பா, மகன் என ஒரே குடும்பத்தில் தலைமுறைகள் தாண்டி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஆர்.வெங்கட சுப்பிரமணியம்.
அவர் 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
''1950-களில் மருத்துவம் படித்துவிட்டு, தொடர்ந்து தற்போது வரை 4 தலைமுறைகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறீர்கள். அப்போதைய மருத்துவப் படிப்பு எப்படி இருந்தது?
நாங்கள் படிக்கும்போது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் மட்டும்தான் இருந்தது. சென்னையும், ஆந்திராவும் ஒன்றாக இருந்தது. ஆந்திராவில் இருந்து வரும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்போம். காலை 7 மணியில் இருந்து நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுவோம். அப்படித்தான் செய்முறைப் படிப்பை முடித்தோம். அந்தக் காலத்தில் மருத்துவத்துக்கான அடிப்படைகள் நன்றாகக் கற்பிக்கப்பட்டன. அதுதான் இப்போதுவரை பயனுள்ளதாக இருக்கிறது. மறக்காமலும் இருக்கிறது.
அப்போதெல்லாம் எங்களுக்கு மாட்டு வண்டியில் மதிய உணவு கொண்டுவந்து தருவார்கள். அதைச் சாப்பிட்டபிறகு மதியத்துக்கு மேல், வகுப்புகள் நடக்கும். முடித்துவிட்டு விடுதிக்கு வந்து, இரவில் படிப்போம். 4-ம் ஆண்டில் இருந்து இரவுகளில் சிகிச்சை அளிக்க அழைப்பு வரும். அப்போதும் நிறையக் கற்றுக்கொண்டோம். சில பாடங்களில் ஃபெயிலான மாணவர்களுக்கு விடுதியில் கற்பித்திருக்கிறேன்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறீர்கள். ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறீர்களா?
படித்து முடித்ததும் முதலில் மாநில அரசுப் பணி கிடைத்து, திருவாடானை பகுதியில் பணியாற்றினேன். அந்தப் பகுதியில் பெண் மருத்துவர்கள் இல்லாததால், சிக்கலான மகப்பேறு பிரசவங்கள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை அளித்துள்ளேன்.
அப்போது ராணுவத்தில் என்னுடைய நண்பர்கள் சேர்ந்ததால், எனக்கும் சேர ஆசை வந்தது. விண்ணப்பித்ததும் வேலை கிடைத்தது. மருத்துவமனைக்கு பதிலாக ரெஜிமென்ட்டில் பணியாற்றினேன். அங்கு ஒவ்வொரு பட்டாலியன்களுக்கும் ஒரு மருத்துவ அலுவலர் தேவைப்படும். அந்த வகையில் காஷ்மீரில் 1000 பேருடனான சீக் பட்டாலியனுடன் வேலை செய்தேன். ஜான்சி, மகாராஷ்டிர, அலகாபாத் ரெஜிமென்ட்டுகளில் பணியாற்றினேன்.
ஒருமுறை நாகலாந்தில் உள்ள நாகா மலை கூர்க்கா பட்டாலியனில் சேர அழைப்பு வந்தது. இரவு 10 மணிக்குச் சென்றபோது துப்பாக்கியைத் தலையில் வைத்தார் காவலர் ஒருவர். எனக்குத் தெரிந்த இந்தியில் வேலைக்குச் சேர்ந்திருப்பதாகச் சொல்லி, சமாளித்தேன்.
ஒருமுறை கிழக்கு பாகிஸ்தான் எல்லையில், டவ்கி ஆற்றின் அருகே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே பாக். வீரர்கள் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருப்பர். குண்டுகள் பட்டு, நாங்கள் தங்கி இருந்த டென்ட் கூரைகள் பிய்த்துக்கொண்டு செல்லும். நாங்கள் குழி தோண்டி, கீழே தங்கியிருப்போம். சவாலான காலகட்டம் அது.
உங்களிடம் வரும் நோயாளிகளுக்கு ஸ்கேன், பரிசோதனைகளுக்குப் பரிந்துரைக்காமலேயே என்ன நோய் என்று கணித்து விடுவீர்களாமே. இது எப்படி சாத்தியம்?
அனுபவம்தான் காரணம். அப்போதெல்லாம் ஸ்கேன் கிடையாது. அரிதாகத்தான் எக்ஸ்ரே எடுப்போம். எல்லாவற்றுக்கும் ரத்தப் பரிசோதனை செய்ய மாட்டோம். கூடுமானவரை Clinical diagnosis எனப்படும் நோய் நாடல்தான் முக்கியமாக இருக்கும். அதிலேயே 100-க்கு 80 சதவீத நோயாளிகளுக்குச் சரியாகிவிடும். சிலருக்கு மட்டுமே சோதனைகள் எடுத்து, சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். அவ்வாறே செய்துள்ளேன்.
91 வயதிலும் 4 தலைமுறைகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறீர்களே, எப்படி?
கடவுளின் செயல்தான் காரணம். பிறரின் நோயைப் போக்க எனக்கு உதவும் ஆண்டவனுக்கு, இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வீட்டில் அனைவரும் அளிக்கும் ஒத்துழைப்பும் முக்கியக் காரணம்.
உங்களின் இளமைக் காலத்தில் பெருந்தொற்றுகள் ஏற்பட்டனவா? அவற்றை எப்படி எதிர்கொண்டீர்கள்?
அப்போது கொரோனா எல்லாம் கிடையாது. முதல்முறையாக டெங்கு காய்ச்சல் வந்திருந்தது. வராண்டாவில் நோயாளிகள் படுத்துக்கொண்டு, அலறுவார்கள். பழங்கால மருத்துவ முறையைத்தான் அவர்களுக்குக் கையாண்டு குணப்படுத்தினோம். அனுபவத்தின் மூலமாகவும் பேராசிரியர்களின் வகுப்புகள் மூலமாகவும் ஒவ்வொரு நோயையும் கையாளக் கற்றுக்கொண்டோம்.
அப்போதைய மருத்துவத்துக்கும் நவீன மருத்துவத்துக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
இப்போதைய மருத்துவர்கள் அமெரிக்க பாணியில் எல்லாவற்றையும் முதலிலேயே சொல்லி விடுகிறார்கள். அதாவது, ’உங்களுக்கு இந்த நோய் உள்ளது. நான் இந்த மருத்துவம் செய்யப் போகிறேன்’ என்று சொல்லி விடுகின்றனர். இது நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்கலாம். விரைவில் நோய் குணமாகும் என்று சொல்லிவிட்டு, தேவைப்பட்டால் மட்டும் சில சிக்கல்கள் வரலாம் என்று சொல்வது உத்தமம்.
இதற்கு முன்பு எனக்கு இப்படி வந்ததே இல்லையே என்று நோயாளிகள் சொல்வார்கள். உங்களுக்கு வயது கூடுகிறது, வந்துவிட்டது என்று சொல்லக்கூடாது. சில நேரங்களில் இப்படியாகும். சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரியாகும் என்று சொல்ல வேண்டும். எந்தக் கட்டத்திலும் நோயாளிகளை உற்சாகப்படுத்துவதும் நம்பிக்கை கொடுப்பதும் மிகவும் முக்கியம். அதே நேரத்தில் உள்ளதை மறைக்காமல் பாலிஷாகச் சொல்ல வேண்டும்.
மருத்துவத்துக்கான நுழைவுத் தேர்வை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அப்போது நுழைவுத் தேர்வு கிடையாது. சமுதாயம் அடிப்படையில் மாவட்ட வாரியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இப்போது தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது அவசியம் என்று தோணவில்லை. நீட் தேர்வுக்கு வட இந்திய மாணவர்கள் நன்றாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஆனால் இங்கு பயிற்சி போதாததால் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லத் தேவையில்லை. எல்லோருக்குமே அடிப்படையை நன்றாகக் கொடுத்தாலே போதும். அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.
நிறைய மொழிகள் பேசுவீர்களாமே?
8 மொழிகள் தெரியும். அப்போதைய மெட்ராஸ் மாகாணம் பிரிக்கப்படாமல் இருந்ததால், ஆந்திர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தெலுங்கு கற்றுக்கொண்டோம். படிக்கும்போது அறை நண்பராக ஒரு மலையாளி இருந்தார். அவரிடம் இருந்து மலையாளம் கற்றுக்கொண்டேன். மனைவி பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பதால் கன்னடம் கற்க வேண்டியிருந்தது. . ராணுவத்தில் பணியாற்றியதால் இந்தி மொழியைக் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காஷ்மீரில் சீக் பட்டாலியனில் பணியாற்றும்போது பஞ்சாபி கற்றுக்கொண்டேன். கூர்க்காலி (நேபாளி) மொழியையும் கற்றேன். ஆனால் காலப்போக்கில் மறந்துவிட்டது.
நம் உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு மருத்துவரைப் போய்ப் பார்க்கிறோம். இதனால் குடும்ப மருத்துவர் என்ற கலாச்சாரம் வழக்கொழிந்து வருகிறதே...
நான் அடிக்கடி இதைச் சொல்வேன். பொது மருத்துவர் எல்லாவற்றைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பார். சிறப்பு மருத்துவர் ஒன்றைப் பற்றி மட்டும் ஒன்றைத் தெரிந்து வைத்திருப்பர். கூடியவரை பொது மருத்துவரை வந்து பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் மட்டும் சிறப்பு மருத்துவரைப் பார்த்தால் போதும்.
முன்பு நாங்களேதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது சிறப்பு மருத்துவம் குறித்து விளம்பரப்படுத்திக்கொண்டே இருப்பதால், குடும்ப மருத்துவம் என்ற கலாச்சாரம் குறைந்துவிட்டது.
கல்வி, மருத்துவம் இரண்டும் வணிகமயமாக, பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டதே?
வேதனையான ஒன்று. மருத்துவம் மானுடத்துக்கான சேவை. மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தைக் கல்லூரிக் காலத்தில் இருந்தே மாணவர்களிடம் புகுத்த வேண்டும். எங்களின் பேராசிரியர்கள் இதை எங்களுக்குச் செய்தார்கள். இது தொடர வேண்டும்.
உங்களிடம் எந்தெந்தப் பிரபலங்கள் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்? மறக்க முடியாத அனுபவம் ஏதாவது?
நடிகைகள் ஜெயமாலினி, பானுப்ரியா அடிக்கடி வருவார்கள். இன்னிசைத் தென்றல் தேவா சிகிச்சை பெற்றிருக்கிறார். கன்னட நடிகர் புட்டண்ணா, அவரின் குடும்பத்தினர் வருவார்கள். நிறையப் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கோவிட் காலத்துக்குப் பிறகு நிறையப் பேர் வருவதில்லை. பிரபலங்களாக இருந்தாலும் மருத்துவராகிய எனக்கு மரியாதை கொடுப்பார்கள்.
கோவிட் காலகட்டத்தில் 91 வயதிலும் எப்படி உங்களால் எல்லோருக்கும் சிகிச்சை அளிக்க முடிகிறது?
முதல் ஓராண்டு நானும் மருத்துவமனையை மூடிதான் இருந்தேன். இங்கு நிறையப் பேர் வருவதால், நம்மால் யாருக்கும் கொரோனா பரவிவிடக் கூடாது என்று நினைத்தேன். மற்ற நோய்கள் குறித்து அறிந்த அளவுக்கு, கொரோனா குறித்து அறிந்திருக்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனையில் தொற்று நோய் சிறப்பு மருத்துவராகவும் தமிழ்நாடு அரசு கோவிட் வல்லுநர் குழுவில் உறுப்பினராகவும் இருக்கும் மகன் ராமசுப்பிரமணியத்திடம் பேசினேன். பிறகு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மருத்துவமனைக்கு வந்துகொண்டிருக்கிறேன்.
நாளுக்கு நாள் புதிதுபுதிதாக நோய்கள் தாக்குகின்றன. அவற்றுக்கான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் உங்களை எப்படி அப்டேட் செய்துகொள்கிறீர்கள்?
நிறைய மருத்துவ ஆய்விதழ்களைப் படிக்கிறேன். என்னுடைய மகனும் நானும் வாரம் ஒருமுறை, நோய்கள், மருத்துவ சிகிச்சைகள் குறித்துக் கலந்துபேசுவோம். அந்த வகையில் என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன்.
இப்போதும் இந்தி, தெலுங்கில் சரளமாகப் பேசுவதால் அந்த மொழிகள் தெரிந்தவர்கள், மகிழ்ச்சியுடன் மருத்துவமனை வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
ஒரு மூத்த மருத்துவராக இளம் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நோயாளிகளைப் பயமுறுத்தாதீர்கள். நம்பிக்கை ஊட்டுங்கள். அதேநேரத்தில், எல்லாவற்றையும் விட்டுவிடக்கூடாது. சரியான சிகிச்சை அளித்து, தைரியமூட்ட வேண்டும். பரிசோதனைகளை வழக்கமாக்குவதை நான் விரும்பவில்லை. தேவையென்றால் மட்டுமே எழுதிக்கொடுக்க வேண்டும். முடிந்தவரை நோயை அனுபவத்தின் மூலமே அறிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் தேவையற்ற செலவுகள் குறையும். நோயாளிகளின் உடலுக்கும் அதுவே நல்லது. நோயாளிகளின் கஷ்டங்களைப் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அதுதான் Ventilation Therapy. இதனால் மருந்துகளும் சரியாக வேலை செய்யும்.
மக்களின் பயத்தாலும், மன அழுத்தத்தாலும்தான் பாதி நோய்கள் வருகின்றன. அதை முதலில் விட்டொழிக்க வேண்டும். நம் உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது என்பது அடிக்கடி நாமே நினைக்க வேண்டும்''.
கணீர் குரலில் பேசி முடித்த மருத்துவர் ஆர்.வெங்கட சுப்பிரமணியன், இந்த வயதிலும் காரை ஓட்டியவாறே விடைபெற்றார்.