ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆவின் பொருட்களின் புதிய விலை பட்டியல் இடம்பெற்றிருக்கிறது.
கிடுகிடுவென உயர்ந்த விலை:
புதிய விலை பட்டியல் விலையின் படி, முன்னதாக 27 ரூபாயாக இருந்த அரைக்கிலோ தயிர், தற்போது 30 ரூபாயாகவும், 14 ரூபாயாக இருந்த 200 கிராம் தயிர் 15 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் நெய் (ஜார்) 535 ரூபாயாகவும், 265 ரூபாயாக இருந்த அரை லிட்டர் நெய் (ஜார்) 275 ரூபாயாகவும், 115 ரூபாயாக இருந்த 200 கிராம் நெய் (ஜார்) 120 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே போல 2550 ரூபாயாக இருந்த 5 லிட்டர் நெய் (ஜார்) தற்போது 2650 ரூபாயாகவும், 8350 ரூபாயாக இருந்த நெய் (டின்) 8650 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது அதே போல 80 ரூபாயாக இருந்த 200 கிராம் பாதாம் பவுடர் 100 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
பால் முகர்வர்கள் கண்டனம்
இந்த புதிய விலையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த பால் விலை பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி கடந்த வாரம் தனியார் நிறுவனங்கள் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய நிலையில் தற்போது தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் நெய், பாதாம் பால் பவுடர், SMP (Skimmed Milk Powder), தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலை குறிப்பாக ஆவின் நெய் லிட்டருக்கு 30.00ரூபாய் வரையிலும், SMP (Skimmed Milk Powder) 1Kg 40.00ரூபாய், பாதாம் பால் பவுடர் 1Kg 100.00ரூபாய், தயிர் லிட்டருக்கு 6.00ரூபாய் என கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டு புதிய விற்பனை விலை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
வழக்கமாக பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலை உயர்வு தொடர்பாக ஒரு வார காலத்திற்கு முன் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கி அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போதைய விற்பனை விலை உயர்வு இன்று (04.03.2022) முதல் அமுலுக்கு வருகிறது என்கிற தகவலை 24 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது நேற்றைய (03.03.2022) தினம் ஆவின் விற்பனை பிரிவு பொதுமேலாளர் அவர்களால் வெளியிடப்பட்டிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக ஆவின் பால் விற்பனையை குறைக்க செயற்கையான பால் தட்டுப்பாட்டை ஆவின் அதிகாரிகள் உருவாக்கி வரும் சூழ்நிலையில் தற்போது ஆவின் பால் பொருட்களின் கடுமையான விற்பனை விலை உயர்வு அதனை உறுதி செய்வதாக உள்ளது. எனவே தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் பால் பொருட்கள் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் தலையில் ஆவின் நிர்வாகம் சுமத்தியிருக்கும் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற உத்தரவிடுவதோடு, ஆவின் பால் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.