கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கோவை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே திமுக சார்பில் மேயர் பதவிக்கு கல்பனா ஆனந்தகுமாரும், துணை மேயர் பதவிக்கு வெற்றி செல்வனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 3 அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேர் பங்கேற்கவில்லை. 96 பேர் ஒருமனதாக போட்டியின்றி கல்பனா ஆனந்தகுமாரை மேயராக தேர்வு செய்தனர். இதனால் கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார். இதேபோல திமுகவின் முதல் மேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.




இதையடுத்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மேயராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை கல்பனா ஆனந்தகுமாரிடம் வழங்கினார். இதையடுத்து கல்பனா ஆனந்தகுமார் மேயர் அங்கி அணிந்தபடி வந்து மேயராக பொறுப்பேற்றார். அப்போது செங்கோல் ஏந்தியபடி, மேயர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து கல்பனாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து திமுக நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கல்பனாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


பின்னர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து பயனியர் மில் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் கழிப்பிடம் கட்டுவதற்கான உத்திரவில் மேயர் கல்பனா முதல் கையெழுத்திட்டார். இதையடுத்து மேயர் கல்பனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேயராக என்னை தேர்வு செய்த முதல்வருக்கு நன்றி. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி. பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்பேன். பொது மக்கள் எப்பொழுதும் என்னை சந்தித்து குறைகளை சொல்லலாம். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன். அடிமட்ட உறுப்பினரான என்னை உயர்ந்த பதவியில் உட்கார வைத்து அழகு பார்த்த முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பேன். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தடையின்றி குடிநீர் கிடைக்கவும், தெரு விளக்கு சாலை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை மேம்படுத்துதல், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் கவனம் செலுத்துவேன்” என அவர் தெரிவித்தார்.




கோவை மாநகராட்சி மேயர் பதவியேற்பு நிகழ்விற்கு பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக அரசின் 9 மாத திட்டங்களுக்கு மணி மகுடமாக இந்த வெற்றி உள்ளது. கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியினை முதல்வர் வழங்கி வருகின்றார். கோவையில் மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி இருக்கின்றனர். ஒரு மனதாக மேயராக கல்பனாவை தேர்வு செய்து இருக்கின்றனர். எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர் கல்பனா. 15 ஆண்டு காலமாக 13 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். அவரது கணவர் கால்டாக்ஸி ஓட்டுனராக வேலை பார்த்து, தற்போது இ சேவை மையம் நடத்தி வருகின்றார்.

கல்பனா வெற்றி பெற்ற பின் பேருந்திலே பயணித்து தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றவர்
. அவரது குடும்பம் இயக்கித்திற்கும், மிசா காலத்திலும் உறுதுணையாக இருந்த குடும்பம். மக்கள் இன்ப துன்பங்களை அறிந்த சாமானியர்களை மேயர், துணை மேயராக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம். இன்று மதியம் வெற்றி செல்வன் துணை மேயர் தேர்தலில் போட்யிடுகின்றார். வட்ட கழக செயலாளராக இருந்தவர் துணைமேயராக தேர்வு செய்யப்பட இருக்கின்றார். நிறைய பேர் பெரிய பொறுப்பில் இருந்தபடி மேயர், துணை மேயர் பதவிகளை எதிர்பார்த்த வேளையில்,சாமானியர்கள் மேயர்,துணை மேயராக முடியும் என்பதை திமுக தலைமை காட்டியிருக்கின்றது. திமுகவில் தேர்வானவர்கள் மன்றத்திற்கு புதியவர்கள் என்றாலும். இயக்கத்தில் மக்களோடு இணக்கமாக இருந்தவர்கள் தேவை ஏற்பட்டால் பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்” என அவர் தெரிவித்தார்.