Aavin Milk: மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பச்சை நிற பாக்கெட் நிறுத்தப்படுகிறதா?


தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.  இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், சமன் படுத்தப்பட்ட பால், அதிகளவு விற்பனையாகக் கூடிய நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிற பாக்கெட்டில் விநியோகிக்கப்படுகிறது.  


இதில் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் 4.5 சதவீத கொழுப்புச்சத்துடன் லிட்டர் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படியிருக்க, பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நவம்பர் 25ஆம் தேதியுடன் நிறுத்துவதகாவும், அதற்கு பதில் அதே விலையில் 3.5 கொழுப்புச்சத்துடன் கூடிய டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும் அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 


ஆவின் விளக்கம்


இந்நிலையில், பச்சை நிற பால் பாக்கெட்டுகளை நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் தொடர்பாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் விற்பனை நாளொன்றுக்கு சுமார் 14.50 இலட்சம் லிட்டரும் மற்றும் நானொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பால் உபபொருட்களை சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


மேலும் பொதுமக்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் அனைத்து இடங்களிலும் எளிதில் கிடைக்கும் வகையில் ஆவின் நிருவாகம் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலா தளங்களிலும் ஆவின் விற்பனை நிலையங்களை அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


பொதுமக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா நிறம்) சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) மற்றும் நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த 00.05-2023 அன்று சென்னையில் விட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட டிலைட் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) (3.5 Fat & 8.55 SNF) அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


ஆவின் நிர்வாகம் எல்லா காலகட்டங்களிலும் பொதுமக்கள் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது. எனவே மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.