Annamalai: தவறான தகவலை பகிர்ந்ததாக குற்றம்சாட்டி, மன்னிப்பு கோருமாறும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆவின் பச்சை பால் பாக்கெட் சர்ச்சை:
தமிழ்நாடு முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், சமன் படுத்தப்பட்ட பால், அதிகளவு விற்பனையாகக் கூடிய நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிற பாக்கெட்டில் விநியோகிக்கப்படுகிறது.
இதில் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் 4.5 சதவீத கொழுப்புச்சத்துடன் லிட்டர் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படியிருக்க, பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நவம்பர் 25ஆம் தேதியுடன் நிறுத்துவதகாவும், அதற்கு பதில் அதே விலையில் 3.5 கொழுப்புச்சத்துடன் கூடிய டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும் அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று விளக்கம் அளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொரோனா காலத்தில் மற்ற நிறுவனங்கள் எல்லாம் கொள்முதலை நிறுத்திய நிலையில், ஆவின் மட்டுமே பால் கொள்முதலில் ஈடுபட்டதால் 34 லட்சம் லிட்டர வரை கொள்முதல் செய்துள்ளோம். வடநாட்டில் இருக்கக் கூடிய நிறுவனங்களை இங்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அதற்கு கையூட்டு பெற்றுவிட்டு பேசுவது தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடிய ஒரு செயல்" என்று பேசியிருந்தார்.
அண்ணாமலை காட்டம்:
அமைச்சர் மனோ தங்கராஜ் பேசிய கருத்துக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார். அதன்படி, ”அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களே, இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்.
ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு” என்று பதிவிட்டிருந்தார் அண்ணாமலை.
மேலும் படிக்க
"ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது" மாநில அரசுகளின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டிய உச்ச நீதிமன்றம்