எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து அதிகார போட்டி நிலவி வருகிறது. கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, பஞ்சாப், மேற்குவங்கம் என ஆளுநர் - அரசாங்கம் மோதல் நீடிக்கும் மாநிலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலதாமதம் செய்வதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


பாஜக அல்லாத மாநிலங்களில் வரம்பை மீறுகிறார்களா ஆளுநர்கள்?


பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் முக்கிய மசோதாக்களை அவர் வேண்டுமென்றே தாமதிப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 10ஆம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் நேற்றுதான் தீர்ப்பின் முழு விவரங்கள் வெளியிடப்பட்டது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தால் ஆளுநர் அதை விரைவாக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், சட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி கேட்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


"திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவில் திருத்தம் மேற்கொண்டோ அல்லது திருத்தம் மேற்கொள்ளாமலோ மாநில அரசு அதை திருப்பி அனுப்பினால், ஆளுநருக்கு வேறு வழியும் இல்லை. அதிகாரமும் இல்லை. அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும்" என மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மாநில அரசுகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:


"அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200இன் கீழ் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இம்மாதிரியான சூழலில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை ஆளுநர் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்ட மசோதாக்களை கூடிய விரைவில் சட்டப்பேரவையில் திருப்பி அனுப்ப வேண்டும். அப்போது, மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டு கொள்ள வேண்டும்.


ஆளுநரின் ஆலோசனைகளை ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாமல் இருப்பதும் சட்டப்பேரவையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது" என இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.


உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டும் இன்றி, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 முக்கியமான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பியிருந்தார். அந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ளது.