சென்னையின் 2ஆவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றிய 20 கிராமங்களில் சுமார் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
ஆனால், பரந்தூரில் விமான நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பரந்தூர் சுற்று வட்டார கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இச்சூழலில், பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்த ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு:
இத்திட்டத்தால் தங்கள் விளைநிலங்கள் பாதிக்கக்கூடும் என்பதால் கடந்த ஒராண்டுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டத்தால் நீர்நிலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய தமிழ் நாடு அரசால் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழு ஒரு மாதத்திற்கு முன்பாகவே தனது ஆய்வை முடித்துள்ளது.
இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப – பொருளாதார மதிப்பீடு அறிக்கை தயார் செய்வதற்கும் தமிழ் நாடு அரசால் ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 23.11.2023 அன்று பரந்தூர் விமான நிலையத்திற்கான நிர்வாக ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நிலம் எடுப்புப் பணிகளைத் துவங்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இத்தகவலை அறிந்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் 24.11.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தமிழ் நாடு அரசு இத்திட்டத்திற்காக வெளியிட்ட அரசாணையைத் தருமாறு கோரியுள்ளனர். 31.10.2023 அன்று தமிழ் நாடு தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் வெளியான அரசாணை கிராம மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைப்பதால் நீர்நிலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு முடிவுகள் என்ன என்பதை வெளியிடாமல் திட்டத்திற்கான ஒப்புதல் அளித்தது ஏன் எனக்கோரி மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் குழுவினரை காவல்துறை கைது செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள மொத்த நிலத்தில் பாதிக்கு மேல் நீர்நிலைகளாக இருப்பதால் இத்திட்டம் நிச்சயம் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். இது தொடர்பாக விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முன்பாக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்க நிர்வாக அனுமதி வழங்கியது ஏற்புடையது அல்ல.
அதிக பாதிப்பை ஏற்படுத்துமா பரந்தூர் விமான நிலையம்?
தொடக்கத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்த 4563 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என செய்திகளில் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியான அரசாணை 20 கிராமங்களைச் சேர்ந்த 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் எனவும் அதில் 2682.62 ஏக்கர் WETLANDS(வேளாண் நிலம்+நீர்நிலை) எனக் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு விமான நிலையைம் வந்தால் அதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திட்டங்கள், கட்டுமானங்கள், அடிப்படை வசதிகள் எழுப்ப நிலம் பயன்படுத்தப்படும் என்பதால் இத்திட்டம் வேளாண்மை மற்றும் நீர்நிலைகளில் எதிர்பார்த்ததைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.
எங்கள் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் பன்னூரா? பரந்தூரா? என்பது தொடராக இந்திய விமான நிலையம் தயாரித்த ஒப்பீட்டு அறிக்கையில் பன்னூரைவிட பரந்தூரில்தான் விமான நிலையத்திற்கு வெளியே கட்டமைப்பு வசதிகளை உருவாக்கத் தேவையான நிலங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்படும் இடங்களுக்கு வெளியே இருக்கும் வேளாண் மற்றும் நீர்நிலைப் பகுதிகளும் பாதிப்படையும் என்பது உறுதியாகிறது.
மேலும், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆணைகள் குறித்தும் இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அதில் திட்ட அமைவிடத்தில் உள்ள நீர்நிலைகளை முடிந்த அளவிற்கு அப்படியே பாதுகாப்பது எப்படி என ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது. இந்த ஒரு வசதிக்காகத்தான் சில மாதங்களுக்கு முன்பு நில ஒருங்கிணைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதா என சந்தேகம் எழுகிறது.
உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின்படி, சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் நீர் நிலைகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பது குறித்து அப்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திட்டத்தால் பாதிப்படையும் நீர்நிலைகளின் கொள்ளவைவிட அதிக கொள்ளவு கொண்ட நீர்நிலைகள் உருவாக்குவது உறுதி செய்யப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திட்ட அமைவிடத்தில் சேகரமாகும் நீர் மற்றும் அந்த வழியாக கால்வாயில் செல்லும் நீரைத் தடுப்பதோ, மடைமாற்றம் செய்வதோ நிச்சயமாக பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும்.
வளர்ச்சி திட்டம் என்றால் என்ன?
எந்த ஒரு பகுதியையும் தொழிற்திட்டப் பகுதியாக மாற்ற வேண்டும் என்றால் Tamil Nadu Town and Country Planning Act என்னும் சட்டத்தின், இப்படியான மாற்றத்தின் காரணமாக மக்கள் மீது உண்டாகும் பாதிப்புகள் உண்டாகுமா என்பதை ஆய்வு செய்து, பெரும் பாதிப்புகள் இல்லாத நிலையில் அந்த பகுதியை Industrial Area என்று அரசாணை வெளியிட வேண்டும். இப்படியான நடவடிக்கை இங்கு மேற்கொள்ளப்படவில்லை.
ஒரு வளர்ச்சித் திட்டம் முன்வைக்கப்படும்போது அது உண்மையில் வளர்ச்சியா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் மூன்று அம்சங்கள் பொருளாதார நன்மைகள், சூழலியல் பாதிப்புகள் , சமூக தாக்கங்கள் (மக்களுக்கு ஏற்படப்போகும் நன்மைகள் அல்லது தீமைகள்).
இவை மூன்றையும் ஒரு தராசில் நிறுத்திப் பார்த்து, அது குறைந்த சூழலியல் பாதிப்புகளுடன் சமூகத்திற்கு அதிக நன்மை தரக்கூடியதாக இருந்தால்தான் அது உண்மையான வளர்ச்சித் திட்டமாகும்.
ஆனால், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான இடம் தேர்வு செய்வதற்கு பொருளாதார காரணங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சூழலியல் பாதிப்புகள் மற்றும் மக்களுக்கு ஏற்பட போகும் பாதிப்புகள் புறந்தள்ளப்பட்டுள்ளதை இந்த அரசாணை வெளிக்காட்டுகிறது.
தொழில் வளர்ச்சி, சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலா அதிகரிப்பு, ஏற்றுமதி மற்றும் சரக்கு போக்குவரத்து பெருக்கம் ஆகியவை பரந்தூர் விமான நிலையத்தின் பொருளாதார நன்மைகளாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் முன்மொழியப்பட்டிருக்கும் 5746.18 ஏக்கர் நிலத்தில் 2682.62 ஏக்கர் அதாவது மொத்த நிலத்தில் 46.68% நீர்நிலைகளையும் நஞ்சை நிலங்களும் (Wetland) ஆகும். சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான முக்கியமான நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் உணவு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் விவசாய நிலங்களையும் பொருட்படுத்தாமல், 20 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பொருட்படுத்தாமல் கொண்டு வரப்படும் இத்திட்டம் நிச்சியம் மக்களுக்கான வளர்ச்சி திட்டம் இல்லை.