ஆவின் நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு மலிவு விலையில் பால் பொருட்கள் வழங்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆவின் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு பால் பொருட்கள், ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள் என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தரம் மற்றும் மலிவு விலை ஆகிய காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் ஆவின் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதனிடையே தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது ஆவினில் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டு வந்தது.
சமீபத்தில் ஆவினில் விற்பனை செய்யப்பட்டு வந்த பால் பாக்கெட்டுகளில் ஆரஞ்சு நிறப் பாக்கெட்டுகள் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
வெண்ணெய் விலை உயர்வு
இந்நிலையில் ஆவினில் விற்பனை செய்யப்பட்டு வரும் வெண்ணெய் விலையை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமையல் பயன்பாட்டிற்கான உப்பு கலக்காத வெண்ணெய் (100 கிராம்) 52 ரூபாயில் இருந்து 55 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 500 கிராம் வெண்ணெய் ரூ.250ல் இருந்து ரூ.260 ஆகவும், உப்பு கலந்த வெண்ணெய் (100 கிராம்) 52 ரூபாயில் இருந்து 55 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 500 கிராம் 255 ரூபாயில் இருந்து, ரூ.265 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிர்ச்சி
ஏற்கனவே நேற்றைய தினம் ஆவின் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் நெய் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி ஒரு லிட்டர் நெய் விலை ரூ.580-லிருந்து ரூ.630 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 5 லிட்டர் நெய்யின் விலை 2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாகவும், 500 மில்லி லிட்டர் நெய்யின் விலை 290 ரூபாயில் இருந்து 315 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டரின் விலை ரூ.130-லிருந்து 145 ரூபாயாகவும், 100 மில்லி லிட்டர் நெய் விலை ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நெய் மீதான விலையேற்றம் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்தது. ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வந்த நிலையில் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.