குளிர்சாதனப் பெட்டியே தேவையில்லை. டிலைட் பாலை(Aavin Delite Milk) வெளியிலேயே 3 மாதங்கள் வைத்துப் பயன்படுத்தலாம் என்றும் அதன் பிற சிறப்பம்சங்கள் குறித்தும் பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஆவின் எனப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited- AAVIN) பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், பால் பாக்கெட்டுகள் விற்பனையோடு பாலை மதிப்புக் கூட்டி பிற வடிவங்களிலும் விற்பனை செய்து வருகிறது.
ஆவின் சார்பில், சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை), இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா), டீ மேட் (சிவப்பு) உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு 30 லட்சத்திற்கும் மேல் தயாரிக்கப்படுகின்றன. ஆவின் நிறுவனம் மூலம் இந்தப் பால்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. அரசே பால் விற்பனையில் ஈடுபடுவதன் மூலம் குறைந்த விலையில் தமிழகத்தில் பால் விற்பனை செய்யப்படுகிறது.
புது உணவு வகைகள் அறிமுகம்
பால் மட்டுமின்றி பால்கோவா, குலோப் ஜாமூன், ஐஸ்க்ரீம், நெய் உள்ளிட்ட பொருட்களும் ஆவின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தவிர்த்து, பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream), வெள்ளை சாக்லேட் (White Chocolate ), குளிர்ந்த காஃபி (Cold Coffee), வெண்ணெய் கட்டி (Butter Chiplets), பாஸந்தி (Basundi) உள்ளிட்ட பல்வேறு வகைகள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டு, வரவேற்பைப் பெற்றன.
அதேபோல தீபாவளி இனிப்புகள் ரூ.110 கோடிக்கு விற்பனை ஆகி, சாதனை படைத்தது. இந்த நிலையில், இன்று ஆவின் சார்பில் டிலைட் பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து ABP Nadu-விடம் விரிவாகப் பேசினார் பால்வளத் துறை அமைச்சர் நாசர்.
இந்தப் பாலை 90 நாட்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய தேவையில்லை. அறை வெப்ப நிலையிலேயே கெட்டுப் போகாமல் இருக்கும். இதில் எந்த கெமிக்கலும் பயன்படுத்தப்படவில்லை. இதில் கொழுப்பு 3.5 சதவீதமும் எஸ்என்எஃப் 8.5 சதவீதமும் உள்ளது. 500 மில்லி லிட்டர் பால் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
சோழிங்கநல்லூரில் இந்தப் பாலைத் தயாரித்து வருகிறோம். பொது மக்கள் பயன்பாட்டுக்கு இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்லா ஆவின் விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.
திரவ வடிவில் இருக்குமா? பவுடர் போலவா?
வழக்கமாக இருக்கும் பால் போலவே இதுவும் இருக்கும்.
என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது?
இதில் யுஎச்டி எனப்படும் அதி உயர் வெப்பநிலை தொழில்நுட்பம் (Ultra-high-temperature - UHT) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எந்த பாக்டீரியாவும் இதில் தங்கி இருக்காது. இதனால் மாதக்கணக்கில் பால் கெட்டுப் போகாமல் இருக்கும். தேவைப்படும்போது பாலைக் காய்ச்சி, பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.
அது என்ன அதி உயர் வெப்பநிலை தொழில்நுட்பம்?
அதி உயர் வெப்பநிலையில் பால் சில விநாடிகளுக்கு 138 முதல் 150 டிகிரி செல்சியஸ் அதாவது 280 முதல் 302 டிகிரி ஃபாரன்ஹீட் வரை சூடாக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பால் பேக் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது.
பால் பாக்கெட்டைத் திறந்து விட்டால் எவ்வளவு நாளைக்குப் பயன்படுத்த முடியும்?
பால் பாக்கெட்டை அதிகபட்சம் 2 நாட்களுக்கு வெளியில் வைத்துப் பயன்படுத்தலாம்.
யாரெல்லாம் இந்தப் பாலைப் பயன்படுத்தலாம்?
குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள், நோயாளிகள் என எல்லோரும் டிலைட் பாலைப் பயன்படுத்தலாம். தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனம், பிற மாநிலங்களில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் குறைவான விலைக்கு, சேவை மனப்பான்மையில் பாலை விற்பனை செய்கிறது. லாப நிறுவனமாக இல்லாமல், சேவை நிறுவனமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு டிலைட் பால் குறித்து ABP Nadu-விடம் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.