சென்னை பெருநகர் பொது மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர் விளங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ள அதன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 150 கன அடி நீரிலிருந்து, 24 மணி நேரத்தில் வேகமாக அதிகரித்து 800 கனஅடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிக்கு வரும் நீர் வரத்தானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம், கொள்ளளவை கருத்தில் கொண்டு தண்ணீரை திறந்து விட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 



 

இதனை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல் கட்டமாக 100 கனஅடி நீர் 3 மணி அளவில் வெளியேற்றப்பட்டது. ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதற்கு முன், அபாய ஒளி எழுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சிப்காட் தேவை உள்ளிட்ட தேவையின் காரணமாக 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக இப்பொழுது 100 கனஅடி நீர் வெளியே திறந்து விடப்பட்டுள்ளது . நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து, வெளியேற்றப்படும் நீரானது அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வடகிழக்கு பருவ மழையின் பொழுது, முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்ட பொழுது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உடன் இருந்தார். இந்த வருடத்தில் செம்பரம்பாக்கம் ஏரி மூன்றாவது முறை திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



 

 

உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

 

ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர் குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு,  திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.



 


வடகிழக்கு பருவ மழை

 

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.