அமைச்சர் உதயநிதி தலைக்கு  விலை வைப்பது காட்டுமிராண்டித்தனமானது  என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


டிடிவி பேட்டி:


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதும், சனாதனம் தொடர்பான உதயநிதியின் பேச்சு, நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், “சனாதனம் என்றால் என்னவென்று தெரியாமல் அதுதொடர்பாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டாக பேசியுள்ளார். அதேநேரம் அமைச்சர் உதயநிதி தலைக்கு  விலை வைப்பது காட்டுமிராண்டித்தனமானது. தமிழை எப்படி விலைபேசி அரசியல் செய்கிறார்களோ அப்படி தான், தற்போது சனாதனத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது. முன்பு இருந்த அந்த சனாதன கோட்பாடுகள் தற்போது இல்லை. தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது. சமத்துவம் நிலைநாட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும் என்பது தான் எனது ஆசை. 2019ம் ஆண்டு தேர்தலில் மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றது. அந்த சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது, திமுகவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காக கூட்டணிக்கான வாய்ப்புகளை சொன்னேன். அதற்காக நாங்கள் பலவீனமாகிவிடவில்லை. தனித்து போட்டியிடவும் தயார். அதோடு, எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் நீடிக்க அமமுக தொண்டர்கள் விரும்பவில்லை. அதனால் தனித்து நிற்க கூட நான் முடிவெடுக்கலாம்” என கூறினார்.


மேலும் படிக்க: TTV Dhinakaran: "பழனிசாமிக்கு சற்றும் சளைத்தவன் அல்ல நான்" - டிடிவி தினகரன்


ஓபிஎஸ் உடன் கூட்டணி:


வருங்காலத்தில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வேண்டும் என இருவரும் முடிவெடுத்துள்ளோம். ஒருவேளை தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணிக்கு ஓபிஎஸ் சென்றுவிட்டால், நட்பு ரீதியாக நீங்கள் அங்கு இருங்கள், நான் தனியாக போட்டியிடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிடுவேன். நாங்கள் சுதந்திரமானவர்கள், எங்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை” எனவும் டிடிவி தினகரன் பேசியுள்ளார். 


மேலும் படிக்க: Bharat Row: ”இந்தியா பெயரை மாற்றுவது எல்லாம் வதந்தியே” - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஓபன்டாக்


தனித்து போட்டி அறிவிப்பு:


காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மன்னார்குடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய டிடிவி தினகரன், ”காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதிய அழுத்தம் தரவில்லை. விலைவாசி உயர்வு மற்றும் காவிரி பிரச்சினையை திசை திருப்ப சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசி உள்ளார். சனாதானம் என்ற ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அமமுக 40 தொகுதிகளிலும் போட்டியிடும்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.