கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் போலீசார் கடந்த வாரம் அமைத்த சிசிடிவி கேமராவில் சிக்கி கைதாகினர்
கல்லூரி மாணவர்களை மிரட்டி செல்போன் பறிப்பு
சென்னை வண்டலூர் - கேளம்பாக்கம் பிரதான சாலை மேலக்கொட்டையூர் பகுதியில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் யோகா படித்து வரும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மாலை சுமார் 3:30 மணியளவில் நடந்து சென்றுள்ளனர். அப்பொழுது ஸ்பிலண்டர் பைக்கில் 3 பேர், டியோ பைக்கில் 4 என 7 பேர் வந்து 3 கல்லூரி மாணவர்களை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி மாணவர்களிடமிருந்து மூன்று செல்போன், மாணவர்களிடமிருந்து ரூபாய் 400 ரூபாய் பிடிங்கி கொண்டு சென்றுள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார்
செல்போனை பறிகொடுத்த கல்லூரி மாணவர்கள் இதுகுறித்து தாழம்பூர் காவல் நிலையத்தில் (thalambur police station ) புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு சென்று அருகில் பாதுகாப்பிற்காக போலீசார் கடந்த வாரம் அமைத்த புதிய சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி கேமராவில்
ஆய்வில் சிசிடிவி கேமராவில் இரண்டு இருசக்கர வாகனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்ட பின்னர் ஜாலியாக சென்றது பதிவாகி இருந்தது. பின்னர் வாகனத்தின் பதிவு எண் பதிவாகியிருந்ததை, தொடர்ந்து வண்டலூர் அருகே வெங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த 19- வயதான அபினேஷ், 23-வயதான செல்வகுமார், 24-வயதான மோகன், 20-வயதான சூரியா, வெங்கடமங்களத்தை சேர்ந்த 19-வயதான தமிழ்செல்வன், 21-வயதான சூரியா ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர்.
கொலை முயற்சி - திருட்டு - வழிப்பறி
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுபோன்று செல்போன்களை வழிப்பறியில் ஈடுபட்ட பின்பு அதை மார்கெட்டில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து அதில் கஞ்சா, மது என உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் தாம்பரம், பீர்க்கண்காரணை, கூடுவாஞ்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதிரடியாக கைது
பின்னர் அவர்களிடமிருந்து பல்வேறு நபர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்ட 18 செல்போன்கள், வழிபறிக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சிறப்பாக செயல்பட்டு கத்தி முனையில் தொடர் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர்களை அதிரடியாக கைது செய்த ஆய்வாளர் வேலு, உதவி ஆய்வாளர்கள் முத்து கிருஷ்ணன், ராஜசேகர், தலைமை காவலர் சம்பத் மற்றும் காவலர்கள் அப்துல் ரஷீத், லெனின், ரவி, சஞ்சீவி ஆகியோர் கொண்ட தனிப்படையினரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.