விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கும், காணை அடுத்த ஆசாரம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் நடந்தது.  இதனைத் தொடர்ந்து, சங்கீதா காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த அவரது தாய் சரோஜா, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.  சரோஜா இறந்த தூக்கம் மறைவதற்குள், சங்கீதாவை அவரது கணவர் முத்துக்குமரன், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து, உன்னை விரும்பிதானே கரம் பிடித்தேன், உன்னை நம்பிதானே வீட்டைவிட்டு ஓடி வந்தேன், வரதட்சணை கேட்டு வாங்கி வர எங்க வீட்டிற்கு சென்றால் என்னை சேர்க்க மாட்டாங்க என்று சங்கீதா கூறியதாக தெரிகிறது.


இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமரனும்  அவரது அக்கா கலையரசியும் சேர்ந்து, கடந்த 5ஆம் தேதி பகல் 12 மணியளவில் சங்கீதா வீட்டில் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, பின்பக்கமாக அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி, கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் தீக்காயம் அடைந்த சங்கீதா, உடனடியாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சங்கீதாவிடம், நடந்ததை வெளியில் சொல்ல நினைத்தால் உன்னை கொளுத்தியது போல, உன் பிள்ளைகளையும் கொளுத்தி விடுவேன் என முத்துக்குமரன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சங்கீதா, நடந்த உண்மையை யாரிடமும் வெளியில் சொல்லாமல் மறைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சங்கீதாவிடம், வாக்குமூலம் பெற்ற நீதிபதியிடம், என் மீது மண்ணெண்ணையை யாரும் ஊற்றி கொளுத்தவில்லை, தானே கொளுத்திக் கொண்டதாக, சங்கீதா கூறியுள்ளார்.


இந்நிலையில், சங்கீதாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரது காலில் விழுந்து மன்றாடி, கெஞ்சி கூத்தாடி கேட்டபோது, நடந்த உண்மையை அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.  இதையடுத்து, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கண்டமங்கலம் போலீசார் முத்துக்குமரனை கைது செய்து, அவரிடம் தீவிரமாக விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.