கரூர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கில் திமுகவை சேர்ந்த 15 நபர்கள் முதன்மை அமர்வு நீதிபதி அம்பிகா முன்பு ஆஜராகினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட வந்தனர். அசோக் குமார் வீட்டில் சோதனை தொடங்க வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி பெண் அதிகாரிகளை தாக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் இடங்களில் நடைபெற்ற சோதனையையும், தடுத்ததாக கூறப்படுகிறது. திமுகவினரால் தாக்கப்பட்டு சோதனைக்கு வந்த பெண் அதிகாரி காயத்ரி உட்பட நான்கு பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு கரூர் மாநகராட்சி கவுன்சிலர் இரண்டு பேர் உட்பட 19 நபர்களை கைது செய்தனர். ஜாமீன் கோரி திமுகவினர் மனு தாக்கல் செய்தனர். மனுவானது முதன்மை அமர்வு நீதிபதி அம்பிகாவிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜாமீன் தரக் கூடாது என வாதம் முன்வைத்த நிலையில், நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது நீதிமன்றம். மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
விசாரணை நடைபெற்ற நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது, அதிகாரிகளை தாக்கியது, ஆவணங்களை எடுத்துச் சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் மற்றும் முன்ஜாமினை ரத்து செய்யக் கோரியும், வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், ஜாமீன் ரத்து செய்யப்பட்ட அனைவரும் மூன்று நாட்களில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். கரூர் நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என உத்தரவிட்டார். திமுகவை சேர்ந்த 15 நபர்கள் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அம்பிகா முன்பு ஆஜராகினர்.