Chennai: சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் திரிந்த மாடு முட்டியதால், காயமடைந்து சிகிச்சையில் இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தொடரும் அவலம்:


சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதுபோன்று சென்னையில் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும், மாடுகள் சாலைகளில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களை முட்டித் தாக்கியதையும் காண முடிந்தது. இதனால், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது. ஆனால், மாநகராட்சியின் எச்சரிக்கையையும் மீறி சிலர் அலட்சியப் போக்கில் மாடுகளை சாலைகளில அவிழ்த்து விடுகின்றனர். இதனால், விபத்துகள் அதிகரித்து வருகிறது. 


முதியவர் உயிரிழப்பு:


சமீபத்தில் கூட, சென்னை சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதால், காயமடைந்து சிகிச்சையில் இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் 74 வயதான சுந்தரம். மாற்றுத்திறனாளியான இவா், கடந்த 18-ஆம் தேதி ஐஸ் ஹவுஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மாடு திடீரென அவரை முட்டி தூக்கி வீசியது.  இதில் தடுமாறி கீழே விழுந்த அவர், படுகாயம் அடைந்த நிலையில் மயக்கம் அடைந்தார். இதனை அடுத்து,  பலத்த காயமடைந்த முதியவர் சுந்தரத்தை அப்பகுதி மக்கள் மீட்டு,  ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சோ்த்தனா்.  கடந்த 10 நாட்களாக முதியவர் சுந்தரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
முதியவர் சுந்தரத்தை முட்டிய மாடு கோவில் மாடு என்று தகவல் வெளியானது. ஆனால் அந்த மாடு பார்த்தசாரதி கோவிலுக்கு சொந்தமானது அல்ல என்று கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முதியவர் இறந்த சூழ்நிலையில் மாடு முட்டிய காயத்தால் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது தொடர்பான பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். 


மாநகராட்சி விளக்கம்:


இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "ஆதரவு இல்லாமல் சாலையில் சுற்றித்திரிந்த 3,853 மாடுக பிடித்துள்ளோம். அபராதம் விதித்த பிறகு அதனை செலுத்தும் உரிமையாளர்கள் அவற்றை மீண்டும் வெளியே  விட்டுவிடுகின்றனர்.  இதுவரை 75.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மாட்டின் உரிமையாளர் அபராதம் செலுத்திவிட்டு, ஐந்தாவது நாட்களில் வெளியே விடுகின்றனர்.  அதேபோல, மாநகராட்சி அதிகாரிகள் வந்தால் மாடுகளை கட்டி வைக்கின்றனர். இல்லையெனில் அதை சாலையில் திரிய விடுகின்றனர். மேலும், மாடுகளை பிடிக்கச் சென்றால், மாநகராட்சி பணியாளர்களை மிரட்டுகின்றனர். இனிவரும் காலங்களில் மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால், காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.