திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதியின் 3வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சாதி அடிப்படையிலான நாகரிகம் வேரூன்றிய தமிழ்ச்சமூகத்தில் நீதிக்கட்சியின் தலைநிமிர்வு என்பது விஷத்துக்கான சிறுகளிம்பென உருவானது. சுதந்திரம் பெறுவதுதான் நோக்கமென்றாலும் அதிகாரக்கட்டமைப்பின் அடிப்படையில் காங்கிரஸ் அரசியல் கட்சியாக உருவானபோது நீதிக்கட்சியால் தாக்குப்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.சாதிக்கு எதிராகக் களிம்பெல்லாம் சரிபட்டுவராது சாட்டைதான் சரி என திராவிடத்தைக் கையிலெடுத்தார் பெரியார். தமிழ்நாடு என்னும் மாநிலத்தின் பயணம் என்பதை இங்கு திராவிட இயக்கத்தின் நூறாண்டுகால அரசியல் வளர்ச்சியோடு ஒப்பிடலாம். திராவிட இயக்கமென்று பேசினால் அதில் மூன்று பெயர்களைப் பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. பெரியார், அண்ணா, அண்ணாவின் தம்பி கருணாநிதி.  


’தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்!
கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது'


திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த அண்ணாவின் இறப்பில் அவருக்கு கருணாநிதி எழுதிய கவிதையில் இடம்பெறும் வரிகள் இவை. உண்மையில் இந்த வரிகள் பெரியார், அண்ணா, கருணாநிதி என மூவருக்குமே பொருந்தும். மூவரும் இறக்கும் தருவாய் வரை மாநிலத்துக்காக உழைத்தவர்கள். தனது மூத்திரப்பையை தூக்கிக்கொண்டு இறுதி பேருரை நடத்திய பெரியாரின் வழிவந்த கருணாநிதி 2016 பொதுத் தேர்தலுக்காக தனது 93 வயதில்கூட சக்கரநாற்காலியில் அமர்ந்துகொண்டு சூறாவளித் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டவர்,17 பொதுக்கூட்டங்களில் பேசியவர். ‘சக்கரநாற்காலியில் அமர்ந்துகொண்டு மக்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்’ எனக் கண்மூடித்தனமாக வீசப்பட்ட கருத்துகளிடையே ஓய்வறியா உழைப்பென்றால் என்ன என்பதற்கு மேலே சொன்னவை அத்தாட்சி.


மெரிட்தான் நீதியை நிலைநாட்டும் என இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் மேல்தட்டுச் சிந்தனை நிரம்பிய தமிழ்ச்சமூகத்தில் ஒருவேளை சுயமரியாதை என்னும் சொல் ஆதிக்கம் செலுத்தியிருக்காவிட்டால் இந்தியாவில் தமிழ்நாடு என்னும் மானமிகு மாநிலம் உருவாகியிருக்க முடியாது. இன்றைய தேதியில் வடக்கு எல்லையில் இருக்கும் ஜம்மூ காஷ்மீர் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது, மேற்கு வங்கம் மத்தியிலிருந்து அழுத்தம் எழும்போதெல்லாம் சிங்கமெனத் திமிரி எழுந்து மோதிக் கொண்டிருக்கிறது..மத்திய அரசு கொடாக்கண்டன் என்றால் மாநிலங்கள் தாங்கள் விடாக்கண்டன் என அதிகாரத்தை உடும்பெனப் பிடித்துக் கொண்டிருக்கிறதென்றால் அதற்கு அண்ணாவும் அவரின் அரசியல் தம்பியும் இட்ட விதை ஒரு வகையில் காரணமென எவ்வித மாற்றுக்கருத்துமின்றி சொல்லலாம். பெரியாரின் சுயமரியாதைப் பட்டறையில் 18 வயதில் உருவாக்கப்பட்ட கருணாநிதி அவரின் ’குடிஅரசு’ பத்திரிகையில் திருத்தம் பார்த்துக்கொண்டிருந்தவர்.  




ஆனால் கருணாநிதிக்கு எழுத்தின் வழி சினிமா வசப்பட்டது. சுதந்திரப்போராட்ட காலத்தில் சினிமாவின் ஆதிக்கம் இந்தியா முழுவதும் கோலோச்சிய சமயத்தில் தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியாததொரு வசனகர்த்தாவாக உருவெடுத்தார் கருணாநிதி. அதே கருணாநிதிதான் 1949ல் அண்ணா திமுக-வை உருவாக்கியபோது அவரோடு இணைந்து தனது தேர்தல் அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.அண்ணாவைப் பற்றி அதிகம் பேசுவதுதான் கருணாநிதிக்கு அவரது நினைவு தினத்தில் செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்கக் கூடும். தனது ஒவ்வொரு பேச்சிலும் அண்ணாவைப் பற்றிக் குறிப்பிட அவர் தவறியதே இல்லை.  கட்சியின் இக்கட்டான சூழலில் எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்தும் அண்ணாவின் கண்களுக்கும் என்னவோ கருணாநிதி மட்டும்தான் தெரிந்தார்.  உட்கட்சிப் பூசலால் கட்சியின் திருச்சி பிரிவு புகைந்துகொண்டிருந்த சமயத்தில் தனக்கு பேசுவதற்கு அழைப்பு வந்தபோது தான் செல்ல மறுத்து கருணாநிதியைப் பேச அனுப்பி வைத்தார் அண்ணா. 1951-52 தேர்தலில் கட்சி போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்தது. 1956 மே மாதம் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாக கட்சியினர் வாக்களித்தனர். இறுதியாக 1957ல் அண்ணா-கருணாநிதி தலைமையிலான திராவிடப்படை 13பேர் கூட்டணியுடன் அதிகார அரசியலில் நுழைந்தது, சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 




இந்த வெற்றியைவைத்து மெட்ராஸ் பெருநகர மாநகராட்சித் தேர்தலில் கட்சி 100 இடங்களில் போட்டியிடலாம் என முடிவெடுத்தபோது இல்லை 90 இடங்களில் போட்டியிடுவோம் என அவரைச் சுதாரிக்கவைத்தார் கருணாநிதி. தம்பியின் சொல்கேட்டு நடந்தார் அண்ணா. போட்டியிட்டவற்றில் 45 இடங்களில் வெற்றிபெற்று 1959 சென்னைக்கான முதல் மேயரைக் கொடுத்தது அந்தக் கட்சி. சென்னை திமுகவின் கோட்டையானது கருணாநிதியின் அந்தக் கணிப்பின் அடிப்படையில்தான். 




1962ல் காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா தோற்றபோதுகூட கருணாநிதி அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றார். 1967 தேர்தலில் தேசியக் கட்சியான காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றிய முதல் மாநிலக் கட்சியாக உருவானது திமுக. அண்ணா முதலமைச்சரானார். கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சரானார். 1969ல் அண்ணா இறந்தபோது கட்சிக்கு அது பேரிழப்பாக இருந்தது என்று சொல்வது கூடக் குறைந்த மதிப்பீடுதான். எம்.ஜி.ஆர் உட்பட அனைவரும் ஒருமனதாகக் கருணாநிதியைக் கட்சியின் அடுத்த தலைவர் எனவும் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் எனவும் தேர்ந்தெடுத்தார்கள். அன்று தொடங்கிய அந்த பயணம் அவரது இறப்பு வரை பெரியார், அண்ணா என்கிற தமிழ்நாட்டின் கடந்தகாலத்துக்கும் இன்றைய தமிழ்நாட்டு அரசியலுக்கும் இடையிலான அசைக்கமுடியாத வரலாற்றுப் பிணைப்பாக இருந்திருக்கிறது. அண்ணாவுக்கான தனது கவிதையின் இறுதியில், 


’அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..’ எனக் குறிப்பிட்டிருப்பார் கருணாநிதி. 


இரவலாகப் பெற்ற அந்த ஓய்வறியாத இதயம் தற்போது அதே அண்ணாவுக்கு அருகாமையிலேயே கடற்கரையில் உறங்கிக்கொண்டிருக்கிறது.