அழகர்கோயில் ஆடித்தேரோட்ட விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.


மதுரை அழகர்கோயில் கள்ளழகரின் திருவிழாக்களில் சித்திரைப் பெருவிழாவுக்கு அடுத்து தனிச்சிறப்பு வாய்ந்தது ஆடித்தேரோட்ட விழா. முன்னது அழகரை பயணத்தில் கொண்டாடுவது, பின்னது கோவிலுக்குள் கொண்டாடுவது ஆகும்.  


இக்கோயிலின் ஆடித்திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த ஜூலை 24 அன்று நடைபெற்றது. விழாவின் ஒன்பதாம் நாள் ஆடி மாத பௌர்ணமி அன்று அதாவது இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.


இவ்விழாவில் பெரும்பான்மையாக கிராமப்புற, நாட்டுப்புற மக்கள் பங்கேற்பது வழக்கம். மலையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் இக்கோயில் அமைந்திருப்பதால், அதன் பாதுகாப்பு நோக்கில் இம்மக்களோடு கோவிலுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.


தேரோட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சம்:


தேரை இழுக்கும் பணி கோயிலுக்கு கிழக்கிலும் தெற்கிலும் உள்ள சில கிராமத்தின் பரம்பரை பொறுப்பாக உள்ளது. அவர்களே இன்றளவும் தேரை இழுக்கிறார்கள்.  தேர் இழுப்பதை மரியாதைக்குரிய உரிமையாகவே கருதுகிறார்கள். தேரின் முதல் வடத்தை  வெள்ளியங்குன்றம் ஜமீன்தாரின் ஆளுகைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் இழுப்பார்கள்.


தேங்காய் உடைத்து தேரோட்டத்தை துவங்கி வைத்து, முதல் வடத்துக்கான மரியாதையை வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் பெற்றுக்கொள்வார்கள். தேரோட்டம் துவங்கும் முன்னர் அனைத்து ஊரார்களும் இணைந்து மேள தாளம் முழங்க சென்று வெள்ளியங்குன்றம் ஜமீன்தாரை அழைத்து வருவார்கள். அவர் வந்து தேரில் தேங்காய் உடைத்து தேரோட்ட விழாவை துவக்கி வைப்பார். இது தான் காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாக இருந்து வருகிறது. வெள்ளியங்குன்றம் ஜமீன்தாருக்கு இந்த உரிமைகளை கி.பி.1659 ஆம் ஆண்டு மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னர் வழங்கி உள்ளதாக அவர் அளித்துள்ள பட்டயத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தேர் இழுக்கும் ஒவ்வொரு வடத்தாருக்கும் கோவில் சார்பில் 60 படி அரிசி உணவுக்காக வழங்கப்படும். நான்கு வடத்தாருக்கும் 8 முழமுள்ள நாகமடிப்பட்டு கோயில் மரியாதையாக தரப்படுகிறது. ஜமீன்தார் வடத்தை சேர்ந்த மக்களுக்கு 5 தோசையும் 5 அரிசிப் பொங்கலும் பிரசாதமாக வழங்கப்படும். தேரோடும் வீதியில் மலை பின்னணியில் தேர் ஆடியசைந்து வரும் காட்சி பரவசமூட்டக்கூடியதாக இருக்கும்.


இந்த தேரோட்டத்தின் போது வீதியின் இரு புறமும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தேரை இழுத்து, தரிசனம் செய்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் துண்டு வீசி ஆடிப்பாடி விழாவை கொண்டாடி வருகிறார்கள். விழாவுக்காக தென்மாவட்டங்களில் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலில் தங்கியிருந்து கிடா வெட்டி விருந்து படைத்து இந்த திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.


Jailer: அச்சச்சோ...! ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லையாம் - ஏமாற்றத்தில் ரசிகர்கள்!