Actor Rajkiran: இஸ்லாமியர்களுக்கு இயல்பான குணம் இதுதான் என நடிகர் ராஜ்கிரண்  ஃபேஸ்புக் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.


ராஜ் கிரண்:


நல்லி எலும்பை சுக்கு நூறாக கடித்து, வேட்டியை மடித்துக்கட்டி  ஹீரோவுக்கான ஸ்டீரியோ டைப்பை உடைத்து, எளிய மனிதனாக கிராமத்தானாக தன்னை சினிமாவில் அடையாளப்படுத்தியவர் ராஜ்கிரண். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ராஜ்கிரணின் இயற்பெயர் காதர். சினிமாவுக்காக தனது பெயரை ராஜ் கிரண் என மாற்றிக் கொண்டார். ஹீரோவாக நடித்து வந்த ராஜ்கிரண் சில கால இடைவெளிக்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் களமிறங்கினார். இயக்குநர் , தயாரிப்பாளர் , பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட ராஜ்கிரண் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருப்பார். தன்னுடைய கருத்துகளை சுதந்திரமாக பகிர்ந்துக்கொள்ள சோஷியல் மீடியாவை பயன்படுத்திக் கொள்வார். இந்நிலையில், இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், இஸ்லாமிய சமூகத்தின் எதார்த்த குணம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 


ராஜ்கிரண் காட்டம்:


அதன்படி, ”இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல.  "இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.
இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்", பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார். 


மேலும், ”இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ராஜ்கிரண். 


எதிலும் பொறுமையோடும் மனித நேயத்துடனும் இயல்பாக பழகும் மனிதர் ராஜ் கிரண் இவ்வளவு ஆக்ரோஷமான கருத்தை பகிர்வதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்களா? ஆம்..


சீமான் சர்ச்சை கருத்து:


அதாவது, சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்த கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த சீமான், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். அதாவது, "இங்கு இருக்கக் கூடிய கிறிஸ்தவர்களும் நமக்காக வாக்களிக்க போவது கிடையாது. நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் தான். அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது” என சீமான் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இதற்கு மறைமுகமாக ராஜ்கிரண் பதிலடி கொடுத்துருப்பதாகவே பார்க்கப்படுகிறது. 


சீமானின் பேச்சு குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது, ”சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான,அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். முன்பு தாய் மதத்திற்கு திரும்புங்கள் என  சங்கப்பரிவார் தொண்டர் போல் பேசியவர் சீமான்.  தற்போதைய அவரது சிறுபான்மை வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். இத்தகைய வேடாதாரிகளிடம் தமிழக மக்கள் எச்சரிகையாகவே இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.