சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த சஞ்சீப் பனர்ஜி மெகாலயா மாநில உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பிரகாஷ் அவருக்கு பிரிவு உபசார மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சஞ்சீப் பனர்ஜியை சென்னை உயர்நீதிமன்றத்தின் விராட் கோலி எனப் புகழ்ந்துள்ளார்.
தன்னுடைய வாழ்த்து மடலில், ‘2020 ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தோனி (ஏ.பி.சாஹி, முன்னாள் நீதிபதி) விடைபெற்றார். அவரை அடுத்து கோலி (சஞ்சீப் பனர்ஜி) இந்த நீதிமன்றத்துக்கு வந்தார்.அவர் வந்த பிறகு எல்லா ஆட்டமும் 20-20 வகையறாவாகவே இருந்தது.பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் அதற்கான எல்லா ஹோம் ஒர்க்குகளையும் செய்திருந்தார்.காலை 9.15க்குத் தனது அறைக்குத் தவறாமல் வந்துவிடுவார். இரவு 8:00க்கு தான் பணியை முடித்துவிட்டுச் செல்வார்.மாவட்ட நீதிமன்றங்களுக்கு காரிலேயே பயணம் செய்து அங்குள்ள நிறை குறைகளைக் கேட்டறிந்தார். இப்படித்தான் சேலம் மாவட்ட ஃமுன்சீஃப் கோர்ட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தார். அங்கே ஒரு பெண், நீதிபதியைக் காண நீண்ட நேரமாக முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்தப் பெண்ணைச் சந்தித்து குறையை கேட்டறிந்தார் நீதிபதி. அந்தப் பெண் முன்சீஃப் கோர்ட் தனது இடத்தில்தான் கோர்ட்டைக் கட்டியுள்ளதாகவும் ஆனால் அதற்கான வாடகை தருவது நின்றுபோய் விட்டது எனவும் புகார் கூறியிருந்தார்.சென்னை வந்தடைந்த நீதிபதி சஞ்சீப் சேலம் மாவட்ட ஃபோர்ட்ஃபோலியோ நீதிபதியான என்னிடம் அந்தப் பிரச்னை என்ன என கவனிக்கும்படி கூறினார். நான் எப்படி அந்தப் பிரச்னையை கவனிக்கத் தவறினேன் எனத் தெரியவில்லை. எப்படியோ அந்தப் பிரச்னையை பிறகு தீர்த்துவைத்தோம். அவர் வேலைபார்க்கும் மேசை எப்போதுமே தூசு இல்லாமல் வைத்திருப்பார். அவர் ஒரு பக்கா வங்காளி. மனதில் பட்டதை உள்ளது உள்ளபடிச் சொல்பவர்’ என இவ்வாறு அவர் பதிவு செய்திருக்கிறார்.
முன்னதாக சஞ்சீப் பனர்ஜி பணியிடமாற்றத்துக்கு எதிராக நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.