வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு விடிய, விடிய கனமழை சென்னையில் கொட்டித்தீர்த்தது. பின்னர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்றுமுன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டது. இந்த நிலையில், தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை பகுதியை இன்று காலை 11 மணியளவில் நெருங்க உள்ளது. இதைத்தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியிலும், மாமல்லபுரம் அருகே இன்று கரையை கடக்கக்கூடும். இதன்காரணமாக, வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை முதல் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
இதன் தாக்கத்தால் இன்று சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிககனமழையும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
12-ந் தேதி கோவை, நீலகிரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 13-ந் தேதி நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும், 14-ந் தேதி நீலகிரி, கோவை, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று காலை நிலவரப்படி 5 இடங்களில் அதிகனமழையும், 21 இடங்களில் மிக கனமழையும், 40 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் அபாயம் உள்ளதால் அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்