சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை மற்றும் மத்திய சிறைக் காவலர்களுக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. மத்திய சிறையில் 350க்கும் மேற்பட்ட சிறைப் பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், சேலம் மத்திய சிறை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு பகல் காப்பகம், மருத்துவமனை, போட்டிதேர்வு சிறப்பு கல்வி மையம் உள்ளிட்டவை துவங்கப்பட்டுள்ளன. 



இதில் சிறை பணியாளர்களின் குடும்பத்தினர் இருவரும் பணிக்குச் சென்ற நிலையில் குழந்தைகளை கவனிப்பதற்காக குழந்தைகள் காப்பகமும், சிறைப் பணியாளர்கள் குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் நல்ல முறையில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு இலவச முறையில் சிறப்பு டியூஷன் சென்டரும் அமைக்கப்பட்டுள்ளன.


மேலும் அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தும் வகையில் சிறை பணியாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் சிறை பணியாளர்களின் குடும்பத்தினர் அரசு தேர்வு எழுதுவதற்காக போட்டித் தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


இதனை தொடர்ந்து குழந்தைகள் பகல் காப்பகம் மற்றும் சிறப்பு கல்வி நிலையங்களை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை சிறை அலுவலர் கிருஷ்ண குமார், ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள் மற்றும் சிறைப் பணியாளர்கள் உறவினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


முன்னதாக தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தமிழகத்தில் உள்ள அனைத்து சிறை பணியாளர் குடியிருப்பு பகுதியில் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் உடற்பயிற்சி நிலையம், நூலகம் மற்றும் சிறைத்துறை காவலர்கள் குழந்தைகளுக்கான பயிற்சி மையம் திறக்க அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சிறை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் சிறப்பு உடற்பயிற்சி நிலையம் திறக்கப்பட்டது. சேலம் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகம் சுந்தரம் உடற்பயிற்சி நிலையத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.



இதேபோல் சிறைத் துறை காவலர்கள் மன அழுத்தம் குறைப்பதற்கும் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் அரசின் அனைத்து பணியாளர்கள் தேர்வு, போட்டித் தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உட்பட பல அரசு தேர்வுகளுக்கான முக்கிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதேபோன்று சேலம் மத்திய சிறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகள் சிறை துறை தேர்வு எழுதுவதற்கும், மத்திய சிறையில் பணியாற்றும் காவலர்கள் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் போன்று பதவி உயர்வு பெறுவதற்கு இந்த நூலகம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் புத்தகங்களை கொண்டு சிறிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த நூலகமானது, வரும் காலத்தில் பரப்பளவை பெரிதுபடுத்தி மிகப்பெரிய நூலகமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, பல அறிவு சார்ந்த புத்தகங்கள், போட்டித் தேர்வு புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், வீட்டில் உள்ள பெண்களுக்கான புத்தகங்கள் என ஒரு லட்சம் புத்தகங்கள் வரை வைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.