2025 -ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்க திட்டமிட்டு இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் செயல் இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார். மேலும் புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறும் பொது மக்களிடம் கேஸ் அடுப்பு வாங்குமாறு விநியோகஸ்தர்கள் வற்புறுத்தினால் 24339236 என்ற கட்டணமில்லா என்னை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
எத்தனால் கலந்த பெட்ரோல்:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் & செயல் இயக்குனர் அசோகன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய முன்னெடுப்புகள் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: “இந்தியன் ஆயிலைப் பொறுத்தவரை, தமிழ்நாடு மிக முக்கியமான சந்தையாக இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் 54,000 கோடி ரூபாய் தமிழகத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களில் முதலீடு செய்ய இருக்கிறோம்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் உடன் 10 சதவீதம் எத்தனால் கலப்பை எட்டி இருக்கிறோம். 2025 -ஆம் ஆண்டிற்குள் இதை 20 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம்.
விரிவுபடுத்த திட்டம்:
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 26 சில்லறை விற்பனை நிலையங்களில் 20% எத்தனால் கலக்கப்பட பெட்ரோல் (E-20) விநியோகம் நடைபெற்று வருகிறது .2024 ஆம் ஆண்டுக்குள் இதை 66 நிலையங்களுக்கு விரிவுபடுத்த உள்ளோம். இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 400 EV சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது .மேலும் 300 நிலையங்களை தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை விமான நிலையத்திலும் ஒரு EV சார்ஜிங் நிலையம் அமையவிருக்கிறது. இந்த நிலையங்களில் ஒரு யூனிட் 24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவதில் இந்திய ஆயில் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் 2046 -ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய செயல்பாட்டு உமிழ்வை அடைய தீர்மானித்திருக்கிறோம். அதேபோல இந்தியன் ஆயில் நிறுவனம் பசுமை ஆற்றலுக்கு நாட்டை எடுத்துச் செல்லும் நோக்கில் புதுப்பிக்கதக்கவை, பசுமை ஹைட்ரஜன், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மூலம் கார்பன் ஈடு செய்தல் போன்ற பல முயற்சிகளை செயல்படுத்தி வருகிறோம்.
புகார் எண்:
இந்தியன் ஆயில் நிறுவனம் தொடர்ந்து எல் என் ஜி விநியோக நிலையங்களை அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் 6 எல் என் ஜி விநியோகம் நிறுவனங்களை நிறுவ இருக்கிறோம். இந்த எரிபொருள் டீசலுக்கு மாற்றாகவும் நீண்ட தூர வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஐந்து கிலோ எடையுள்ள மினி சமையல் கேஸ் சிலிண்டர் "சோட்டு" இரண்டு கிலோ எடையுள்ள சிலிண்டர் "முன்னா" உள்ளிட்டவை இடம்பெயரும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறும் பொது மக்களிடம் கேஸ் அடுப்பு வாங்குமாறு விநியோகஸ்தர்கள் வற்புறுத்தினால் 24339236 என்ற டோல் ஃப்ரீ என்னை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.