முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6.30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.


தமிழ்நாடு தொழில்துறை சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கவும் அதிக முதலீட்டுகளை ஈட்டவும் தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து முயற்சிகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பல புதிய தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டும் தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்கள் தொழில் நிறுவனங்கள் சார்பில் அனுப்பப்பட்டு உள்ளது.


இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.  சென்னை  தலைமை செயலகத்தில்  இன்று (அக்டோபர் 31ஆம் தேதி) மாலை 6.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இன்று கூடும் அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஆளும் கட்சியினர்  தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அவ்வப்போது ஆளுநரின் பேச்சுக்கு  திமுக பதிலடி கொடுத்தும் வருகிறது. சமீபத்தில் கூட, ”காந்தி மட்டும் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவரை சாதிச்சங்க தலைவராக மாற்றியிருப்பார்கள்.  திருக்குறள், திருமந்திரம் என அனைத்தையும், சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். இதற்கு திமுகவும் காட்டமாக விமர்சித்தது. ஆளுநர் குறித்து நேரடியாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்த நிலையில் ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள், புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அதே நேரத்தில், வரும் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற இருப்பதால், அதற்கு முன் தொழில் தொடங்க வந்துள்ள விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.


செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். செந்தில்பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அமைச்சராக தொடர்வதற்கு சில மூத்த அமைச்சர்கள் ஆட்சேபம் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.


தீபாவளி நேரத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எந்த பிரச்னையும் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட இருக்கிறார்.


இது ஒரு பக்கம் இருக்க தமிழ்நாட்டில் தற்போது காய்ச்சலால்  அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இதனால், மாவட்டங்கள் முழுவதும் காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட உள்ளதாகவும்,  வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக  சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் வட்டாரம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.