சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார் என்பவருது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் பணம் டெபாசிட் ஆனதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அது தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. 


பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் கோடம்பாக்கத்தில் நண்பர் வீட்டில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த வாரம் செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ராஜ்குமாருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. முதற்கட்டமாக ராஜ்குமார் அதில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளது என்பதை எண்ணவே முடியாமல் எவ்வளவு பணம் வந்துள்ளது என குழம்பி இருந்தார்.


அதன் பின் தனது வங்கிக் கணக்கில் வெறும் 105 ரூபாய் இருந்த நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார். இதனை அடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு ரூ. 21,000 பணம் அனுப்பிய பிறகு 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.


இந்நிலையில் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த உடனேயே மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.


தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


இதிலிருந்து பகிரப்பட்ட பணத்தை செலவு செய்ய வேண்டாம் என வங்கி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை அடுத்து நிர்வாகம் தரப்பில் ராஜ்குமாரை திடீரென மிரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும்,  டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ. 21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Cauvery Water: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்குமா? கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..


ஏலே ரெடியா? நெல்லை - சென்னை: செப்., 24 முதல் தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் துவக்கம்...!