Cauvery Water: காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.


காவிரி நீர் விவகாரம்:


டெல்டா விவசாயிகளின் அடிப்படையாக உள்ள காவிரி நீர் தற்போது, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்னையாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தான், தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது.


கருத்து மோதல்:


மேலும் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கான தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட்டது. இதனிடையே, கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது.  இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் அம்மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தேவையற்ற பிரச்னைகளை தருவதாக, முதலமைச்சர் சித்தராமையா பேசியிருந்ததும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அதில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி கர்நாடகாவில் நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.  இதனிடையே ஒழுங்காற்றறுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பது குறித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதுதான் கடைசி முடிவு என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். 


இன்று விசாரணை:


இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஜி.உமாபதி ஆஜராகி, தமிழக அரசின் மனுவை செப்டம்பர் 11, 12ஆம் தேதி விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.  அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பி.ஆர்.கவாய் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழக அரசின் மனு செப்டம்பர் 21ஆம் தேதி விசாரணை எடுத்தக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். அதன்படி இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


இதற்கிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 22,23,24ஆம் தேதிகளில் நடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நியாயமற்றது என அறிவிக்க கோரியும், தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை செப்டம்பர் 27ஆம் தேதி வரை திறக்கக கர்நாடகத்துக்கு  காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 24-வது கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரியும் கர்நாடக அரசு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.