தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்ற விவரம் தெரியவந்துள்ளதாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், நேற்று அக்டோபர் 3ம் தேதியன்று 24000 முகாம்களில் 4ஆம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம் குறித்து பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் இதுவரை 4.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசு சார்பில் மட்டும் 4.54 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களைப் பற்றிய விவரத்தை ஆராய்ந்தபோது அவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் 3.5% பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு தவணை செலுத்தியவர்களில் 7.4% பேர் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை மரபணு பகுப்பாய்வுக் கூடங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் டெல்டா வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா பிளஸோ இல்லை இன்னும் பிற வகைகளோ தமிழ்நாட்டில் இல்லை என்று தெரிவித்தார்.
சிறப்பு முகாம்கள்:
தமிழ்நாடு முழுவதும் மாபெரும் முதல் கட்ட தடுப்பூசி முகாம் செப்டம்பர் 12-ஆம் தேதியன்றும், இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19-ஆம் தேதியன்றும், மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் செப்டம்பர் 26-ஆம் தேதியன்றும் நடைபெற்றது. நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் அக்டோபர் 3-ஆஆம் தேதி நடந்தது. நேற்று ஒரே நாளில் 17.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
உதாரணமாக, மகாராஷ்டிராவில் 2.4 கோடி பேருக்கு கொரோனா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 1.1 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு தேவையான அளவு தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எல்லையோரத்தில் உள்ள மாவட்டங்களில் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.