திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலப்பாதையில் உள்ள வருண லிங்கம் அருகே 20 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரிக்க முயற்சிகள் தொடர்பாக இதுவரை கோயில் பணியாளர்கள் 2 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


வருண லிங்கம் அருகே உள்ள இடத்தில் வாழ்ந்துவந்த சிவனடியார் ஒருவரின் மறைவுக்கு பிறகு, அண்ணாமலையார் கோயில் கட்டுப்பாட்டுக்குள் அந்த இடம் கொண்டு வரப்பட்டது. இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் மூலம் பூட்டப்பட்டு சாவி கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பூட்டுகளை திறந்து அந்த இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக கோயில் நிர்வாகத்திற்கு தகவல் வந்த நிலையில் 20 கோடி மதிப்புள்ள நிலத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. 




 


ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தில் ஆலயத்தின் அனுமதியின்றி கட்டுமான பணிகள் நடந்தது குறித்து கோயில் நிர்வாக அலுவலர்கள் துணை போனதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் நடத்திய விசாரணையில், சாவிகளை பாதுகாக்கும் பொறுப்பு வகிக்கும் கோயில் மணியக்காரர் செந்தில் என்கிற கருணாநிதி, கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் அண்ணாமலையார் கோயில் கோசாலையில் பக்தர்களால் தானமாக வழங்கப்பட்ட ஏராளமான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், பராமரிப்புக்காக கோயில் நிர்வாகம் ஒதுக்கிய நிதியை சரிவர பயன்படுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதும் இதனால் கடந்த ஒராண்டில் மட்டும் 7 பசுக்கள் இறந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  


வீடு வீடா போங்க.. கட்டளையிட்ட ஓபிஎஸ் | OPS | ADMK | MKStalin | DMK | Local Body Election




 


இந்த விவகாரம் தொடர்பாக கோசாலையை பராமரிக்கும் பதிவறை எழுத்தர் ராஜாவை சோமாசிபாடி முருகன் கோயிலுக்கு இடமாற்றம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலையார் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இரண்டு ஊழியர்களை இந்து சமய அறநிலையத்துறை இடமாற்றம் செய்துள்ளது. இந்த முறைகேடு சம்பவங்களில் கோயில் உயரதிகாரிகளின் பங்கு இருப்பதாக விசாரிக்க வேண்டி உள்ளது என பக்தர்கள் கூறி உள்ளனர். 20 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமாக கட்டுமான பணிகள் நடந்து வந்தநிலையில் இதில் தொடர்புடைய கோயில் பணியாளர்கள் மீது காவல்துறையில் ஏன் புகார் அளிக்கவில்லை என்ற கேள்வியை பக்தர்கள் எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில் கோயில் உயரதிகாரிகளின் பங்கு மட்டுமின்றி சில அரசியல் பிரமுகர்களின் பின்புலம் இருப்பதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 


இது கேலிகூத்து.. ஆவேசமடைந்த கிருஷ்ணசாமி | Krishnasamy | Local Body Election | Puthiya Tamilagam