திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் உள்ள இளங்காரக்குடி கிராமத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்களுக்கு சொந்தமான வயலில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த முக்கியத்துவத்தையும் சிறப்புகளையும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் விளக்கி கூறினார். குறிப்பாக தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் வருகிற சந்ததியினர்  இயற்கை விவசாயத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும், அதற்கு முன்னுதாரணமாக எனக்கு சொந்தமான விவசாய நிலம் முழுவதுமாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருவதாகவும் நான் ஒரு விவசாயி என சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்வதாகவும் மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தெரிவித்தார்.



மேலும் நாட்டு காய்கறிகளையும் நாட்டு மாடு வகைகளையும் அதன் சிறப்புகளையும் மற்றும் நமது மாவட்டத்தில் புதுமையாக ஏலக்காய், ஜாதிக்காய், பட்டை, சிவப்பு நெல்லி, மிளகு போன்ற அரிய வகை செடி, மர வகைகள் குறித்தும் மாணவிகளை அந்த இடத்திற்கு நேரடியாக அழைத்துச் சென்று அதன் சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார். மேலும் மாணவிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் இணைந்து தோட்டத்தில் இயற்கை முறையில் நடப்பட்டுள்ள காய்கறிகளை பறித்து அதற்கான விளக்கத்தையும்  மாணவிகளுக்கு தெளிவுபடுத்தினார். குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை திருவாரூர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரம்ப காலகட்டத்தில் நாட்டு மாடுகள் அதிக அளவில் இருந்து வந்ததாகவும் குறிப்பாக மாடுகளின் ரகங்கள் குறித்தும் மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் விளக்கமாக எடுத்துரைத்தார்.



இறுதியாக மாணவிகள் கூறுகையில்... இதுபோன்ற ஒரு சிறப்பான அனுபவம் எங்களுக்கு கிடைத்ததில்லை. நாங்கள் வேளாண் கல்லூரியில் விவசாயம் குறித்து படித்து வருகிறோம். எங்களுடைய பேராசிரியர்கள் எங்களுக்கு விவசாயம் குறித்து பாடம் எடுக்கும் பொழுது இதனை நேரடியாக அந்த இடத்திற்குச் சென்று நீங்கள் பார்த்தால் முழுமையாக தெரிந்து கொள்ளலாம் என கூறியிருக்கிறார்கள். அதனை இன்று நாங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு உள்ளோம். எங்களது பல்கலைக்கழகத்தில் கிடைக்காத ஒரு அனுபவம் செயல்முறையாக நேரடியாக எங்களால் பார்க்க முடிந்தது இதனை எங்களுடன் பயின்று வரும் மற்ற மாணவிகளுக்கும் நண்பர்களுக்கும் இயற்கை விவசாயத்தையும் நாட்டு மாடுகளின் சிறப்புகளையும் கண்டிப்பாக எடுத்துக் கூறுவோம் என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.