வேளாங்கண்ணி அன்னை ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழாவையொட்டி நாளை (25ம் தேதி) முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


வேளாங்கண்ணி திருவிழா


நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான பெரியதேர் பவனி செப்டம்பர் 7-ம் தேதி நடக்கிறது. அடுத்த நாளான 8-ஆம் தேதி கொடியை இறக்குவதோடு திருவிழா நிறைவு பெறும். ஆண்டுவிழாவையொட்டி, நவநாள் பிரார்த்தனை, மாதா மன்றாட்டு, கூட்டு முழக்கங்கள், நற்கருணை ஆசீர்வாதம், கொங்கனி, மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 10 நாட்கள் பூசைகள் நடைபெறுகின்றன.



அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு


இந்த உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத் திருவிழாவிற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 25-ஆம் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை, தினமும் 850 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக ஒரு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Chandrayaan 3 EXCLUSIVE: சந்திரயான் சரித்திர வெற்றி; என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும்?- விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் சிறப்புப் பேட்டி!


பல இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள்


வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவையொட்டி, பக்தர்கள் வந்து செல்வதற்கான வசதிக்காக, சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது. "மேலும், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர், பட்டுக்கோட்டையில் இருந்து வேளாங்கண்ணிக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் 850 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



முன்பதிவு பேருந்துகள்


தொலைதூரப் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் வேளாங்கண்ணிக்கு செல்லவும், அங்கிருந்து வரவும் முன்பதிவும் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், குழுவாக பயணம் செய்ய விரும்புவோருக்கு ஒப்பந்த அடிப்படையிலான பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வேளாங்கண்ணிக் குழுவாக செல்லும் பக்தர்கள் இந்த சேவையையும் முன்பதிவு செய்து பயன்படுத்தலாம் என்று அறிக்கை கூறுகிறது.


சிறப்பு ரயில்


சென்னையின் தாம்பரம் முதல் வேளாங்கண்ணிக்கு சிறப்புக் கட்டணத்துடன் சிறப்பு ரயில் இயக்கப்படும். இதன்படி ஆகஸ்ட் 28ம் தேதி இரவு 9 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06003) மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும். 29ம் தேதி இரவு 7.30 மணிக்கு மீண்டும் வேளாங்கண்ணியில் இருந்து கிளம்பும் அந்த ரயில் (06004) மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரத்திற்கு வந்து சேரும்.