சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடிநீர் ஏரிகளில் 6,816 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவீதம் அளவிற்கான நீர் தற்பொழுது ஏரிகளில் உள்ளது.
செம்பரபாக்கம் நிலவரம் என்ன?
சென்னைக்கு குடிநீர் தேவியை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி எம் சி. இதில் 2.720 டி எம் சி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து நேற்று வரை எதுவும் இல்லாத நிலையில் இன்று காலை பெய்த கனமழையின் காரணமாக 1280 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 157 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குடிநீர் ஏரிகளில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு 72 சதவீதம் உள்ளது. செம்பரம்பாக்கம் சுற்றுவட்டார 56 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
பிற ஏரிகளின் நிலவரம்
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3300 மில்லியன் கன அடியில் தற்போது 1931 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு 130 கன அடி நீர்வரத்து வந்து வந்து கொண்டிருக்கிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 1081 மில்லியன் கன அடியில் தற்போது 112 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 1837 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 460 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக இணைப்பு கால்வாய் மூலம் 70 கன அடி நீர் அனுப்பபட்டு வருகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 500 மில்லியன் கன அடியில், தற்போது 347 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 25 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. பூண்டி எரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் சென்னை நகரில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.