தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, வரும் 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசதிய பொருட்களான காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் இயங்கி வருகிறது. இந்த சூழலில், லோக்கல் சர்க்ள் எனப்படும் அமைப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் ஊரடங்கை தொடர வேண்டுமா?அல்லது  ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமா? என்று மக்களிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டது.


மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள 20 ஆயிரம் மக்களிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 62 சதவீத ஆண்களிடமும், 38 சதவீத பெண்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வரும் நிலையில், 54 சதவீத மக்கள் தமிழக அரசு ஊரடங்கை வரும் மே மாதம் 31-ஆம் தேதி வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகளுடனே நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 30 சதவீத மக்கள் அனைத்து தமிழக அரசு அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களை இயங்க அனுமதித்து, வீட்டிற்கே பொருட்களை வந்து கொடுத்து செல்லும் முறையுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை வரும் மே 31-ஆம் தேதி  வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


ஆனால், 11 சதவீத மக்கள் மட்டும் தமிழக அரசு ஊரடங்கை மே 15-ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும், அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை வழக்கம்போல இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 5 சதவீத மக்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆய்வின் இறுதியில், தமிழகத்தில் 84 சதவீத மக்கள் ஊரடங்கை வரும் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், மின்னணு வணிக நிறுவனங்களையும், ஹோம் டெலிவரி செய்யும் பலசரக்கு கடைகளையும் நாள் முழுவதும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


கடந்தாண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின்போது மக்கள் ஊரடங்கு காரணமாக மிகவும் அவதிப்பட்டனர்.அப்போது, வீட்டிற்கே வந்து பொருட்களை அளிக்கும் ஹோம் டெலிவரி முறை மிகவும் உதவிகரமாக இருந்தது. இதனால், தற்போதைய இரண்டாம் அலையிலும் பெரும்பாலான குடும்பங்கள் அருகில் இருக்கும் மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு தொலைபேசி மூலமாக தங்களுக்கு தேவையான பொருட்களை கூறி, அதனை ஹோம் டெலிவரி மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.


இவர்களில் 48 சதவீத மக்கள் பலசரக்கு மற்றும் மருந்துகளை ஹோம் டெலிவரி மூலம் பெறுகின்றனர். 26 சதவீத மக்கள் ஹோம் டெலிவரி மூலம் அனைத்து பொருட்களையும் பெறுகிறோம் என்று கூறியுள்ளனர். 10 சதவீத மக்கள் எதுவும் கூறவில்லை. மொத்தமாக 74 சதவீத மக்கள் ஹோம் டெலிவரி முறை இந்த ஊரடங்கு தொடங்கியது முதல் ஹோம் டெலிவரியால் பயனடைந்ததாக கூறியுள்ளனர்.