புதிய பாம்பன் பாலத்தின் 84% கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக மித்திய ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த பாலம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச் சென்ற அரிய பொக்கிஷம் ஆகும். இந்த பாலத்திற்காக 146 இரும்பு தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு, இரண்டாயிரத்து 340 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் பாம்பன் தீவையும் இணைக்கிறது. இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் பாம்பன் தீவில்தான் அமைந்துள்ளது.


இந்தியா முழுவதிலும் இருந்து ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கடல் பாலத்தை கடந்து தான் ராமேஸ்வரத்தை அடைய முடியும். 1876இல் ஆங்கிலேயர்கள் இந்தியா-இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899ஆம் ஆண்டில் டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ் பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது. வர்த்தக போக்குவரத்திற்காகவே பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. 


ரயில்கள் செல்வதற்காக பாலம் கட்டப்பட்டால் கப்பல் போக்குவரத்து தடைபடும் என கருத்தில் கொண்டு ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து இரண்டும் தடைபடாதவாறு கட்டப்பட்ட பாலம் தான் பாம்பன் பாலம். இந்த பாலமானது பெரிய கப்பல்கள் வரும்போது தூக்கப்பட்டு வழிவிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.


நூறாண்டு பழமையான பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி விரிசல் விழுந்ததால் பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டும் முடிவை மேற்கொண்டு 2018-ம் ஆண்டு டிசம்பரில் மத்திய ரயில்வே அமைச்சகம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ரயில்வே சார்பில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.




இந்திய ரயில்வேயின் புதிய பாம்பன் பாலத்துக்கான வளர்ச்சிப் பணிகள் நவம்பர் 8, 2019 ஆம் தேதி தொடங்கியது. இந்த பாலத்திற்கான ஒட்டுமொத்த கட்டுமான பணிகள் 2021ஆம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.


கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் புதிய பாலம் எழுப்பப்பட உள்ளது. இந்தத் தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன. பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைய உள்ளது.






கொரோனா தொற்று பரவல் காரணமாக 2021ஆம் ஆண்டு முடிக்கப்பட வேண்டிய பணிகள் தாமதமான நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது புதிய தகவல் பதிவிட்டுள்ள்து. அதில் புதிய பாம்பன் பாலத்துக்கான கட்டுமான பணிகள் 84% முடிவடைந்துள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனுடைய புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.