18ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் வீழ்ச்சியினால் ஆங்கிலேயர்கள், தென்னிந்திய பாளையக்காரர்கள் மீது வரி வசூலிக்கும் உரிமையை பெற்றனர். ஆனால் பாளையக்காரர்கள் வரி செலுத்த மறுத்து, ஆங்கிலேயர்களுடன் போருக்கு தயாராகினர். யார் இந்த பாளையக்காரர்கள், ஏன் அவர்களிடம் ஆங்கிலேயர்கள் கேட்கின்றனர் என்பதை பார்ப்போம்.
பாளையக்காரர்கள்:
14 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் தென் பகுதியில் ஆட்சி செய்து வந்து கொண்டிருந்த விஜயநகர பேரரசானது, தனக்கு கீழ் உள்ள பகுதிகளை எளிமையாக ஆட்சி செய்யும் வகையில் பல பகுதிகளாக பிரித்து, அப்பகுதிகளை நிர்வாகம் செய்ய நாயக்கர்களை நியமிக்கின்றனர். இது தான் நாயக்கர் ஆட்சி முறை என அழைக்கப்படுகிறது. மதுரை பகுதிகளில் ஆட்சி செய்ய விசுவநாத நாயக்கர் என்பவர் நியமனம் செய்யப்படுகிறார். இந்நிலையில் நாயக்கரின் கீழ் உள்ள பகுதிகளை நிர்வாக வசிக்காக பாளையங்களாக பிரித்தனர். மதுரை பகுதியில் 72 பாளையமாக பிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதை நிர்வகிக்கும் பொறுப்பு பெற்றவர்கள் பாளையக்காரர்கள் என அழைக்கப்பட்டனர்.
விஜய நகர பேரரசு- நாயக்கர்கள்- பாளையக்காரர்கள்
பாளையக்காரர்கள் வரி வசூல் செய்து குறிப்பிட்ட பகுதியை நாயக்கர்களுக்கு அளித்து வந்தனர், மீதமிருந்த பகுதிகளை பாளைய பகுதி நிர்வாகங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். இவர்களே சட்ட ஒழுங்கையும் பேணி காத்து வந்தனர். சில பாளையக்காரர்கள் முறையாக நீதி நெறியுடன் நிர்வாகம் செய்து வந்தனர். சில பாளையக்காரர்கள் மக்கள் மீது அதிக வரி விதித்து, மக்களின் வருமாணத்தை சுரண்டவும் செய்தனர்.
ஆற்காடு நவாப்:
முகலாயர்களின் கீழ் ஆட்சி செய்த வந்த ஆற்காடு நவாப்புகள், 18 நூற்றாண்டுகளின் முற்பகுதியில் முகலாயர்களின் வீழ்ச்சி காரணமாக, தங்களை சுதந்திரமாக அறிவித்துக் கொண்டன. அதையடுத்து முகலாயர்களுக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தினர். பின்னர் அவர்களை காத்துக் கொள்ள ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் உதவியை நாடினர். ஆங்கிலேயர்களிடம் கடனாக பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த காலத்தில் தான் நாவப்பினர், நாயக்கர் ஆட்சி பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்தனர். நாயக்கர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்ததும், இவர்களுக்கு வரி செலுத்துவதை பாளையக்காரர்கள் நிறுத்தினர். இந்நிலையில், நவாப்பினர், நாயக்கர்கள் பகுதி தங்களது கட்டுப்பாட்டில் வந்ததாக கூறி, பாளையக்காரர்களிடம் வரி கொடுக்குமாறு கேட்கின்றனர். வரி வசூல் தொடர்பாக இருவருக்கும் முரண்பாடு ஏற்படுகிறது. இதனால் நாயக்கர்கள் வருமான பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க ஆங்கிலேயர்களிடம் அதிக கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியிடம், நீங்கேள வரி வசூலித்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கின்றனர்.
அதன் காரணத்தால் தான், ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்கள் நிர்வாகத்தின் மீது தலையீடு செய்கின்றனர். வரி கட்டுமாறு உத்திரவிடுகின்றனர். ஆனால் பாளையக்காரர்கள், அந்நிய நாட்டு மன்னனுக்கு நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் என மறுக்கின்றனர். பீரங்கி, துப்பாக்கி வைத்திருந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை கண்டு அஞ்சாது. பாளையக்காரர்கள் ஒன்றிணைந்து எதிர்க்க ஆரம்பிக்கின்றனர். பாளையக்காரர்களில் வரி செலுத்த மறுத்து, எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முக்கியமானவர்களாக பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் குயிலி, தீரன் சின்னமலை உள்ளிட்டோராகும்.
அடுத்த பகுதி: நண்பனுக்காக போரை நிறுத்திய பூலித்தேவர்
75th Independence Day 2022: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வரலாறு தொடர்பான 75 சிறப்பு கட்டுரைகளை தொடர். இது தொடரின் 3வது கட்டுரை....
முதல் கட்டுரை: India 75: நெருங்கும் சுதந்திர தினம்.. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்வோம்..
இரண்டாம் கட்டுரை: India 75: இந்தியாவுக்கான கடல்வழி பாதையை காற்றின் உதவியால் கண்டுபிடித்த போர்ச்சுக்கீசியர்கள்.. ஒரு தொகுப்பு..