தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக இதுவரை 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புக்காக மொத்தம் 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 நபர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 நபர்கள் ஆண்கள், 35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்கள், 268 நபர்கள் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
சென்ற அக்டோபர் 31ஆம் தேதி வரையிலான இந்தத் தரவுகளை தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் - 18.48 லட்சம் பேர்
19 - 30 வயதுள்ளவர்கள் 28.09 லட்சம் பேர்
31 - 45 வயதுடையவர்கள் 18.30 லட்சம் பேர்
46 - 60 வயது உடையவர்கள் 2.30 லட்சம் பேர்
60 வயதுக்கு மேற்பட்டோர் - 5,602 பேர்
மாற்றுத் திறனாளிகள் - 1,42,967 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
தமிழ்நாட்டில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை தேசிய சராசரியை விட அதிகமாக உள்ள நிலையில், பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்டுக்கு லட்சக்கணக்கான நபர்கள் உயர் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
2015ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் வராத துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமே நிரப்பப்பட்டன. குறிப்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பதிவு மூப்புப் பட்டியல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன.
எனினும் தற்போது போட்டித் தேர்வுகள் மூலமும் பொது அறிவிப்புகள் மூலமுமே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வே இல்லாமல் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் இடங்கள் கூட பொது அறிவிப்பு மூலம் நிரப்பப்படுகின்றன. இதனால், வேலைவாய்ப்பு அலுவலக முன்பதிவின் தேவை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது.
முந்தைய தரவுகள்
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 34,53,380 ஆண்கள், 39,45,861 பெண்கள், 271 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 73,99,512 நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சுமார் 67.23 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: TN Governor RN Ravi: “ஆளுநர்கள் என்ன ரப்பர் ஸ்டாம்ப்பா? இது எங்கள் கடமை” - கேரளாவில் பொங்கி எழுந்த ஆளுநர் ஆர்.என்.ரவி