தஞ்சை, அருளானந்த நகர், 7 ஆவது குறுக்கு தெரு உள்ள ஒரு வீட்டில்,

  மிகவும் பழமையான, விலை மதிக்க முடியாதபடியிலான கோவில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்  பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் ஜெயந்தி முரளி உத்தரவின் பேரில், காவல்துறை தலைவர் தினகரன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோரின் வழிகாட்டுதலில்,  காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராம்  மற்றும் அசோக் நடராஜன் ஆகியோரின் தலைமையில்,  காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன்,  காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன் பாலச்சந்தர் மற்றும் போலீசார், தஞ்சாவூரில் உள்ள அந்த வீட்டிற்குச் சென்று சோதனையிட்டனர்.


அந்த வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது அங்கிருந்த சாமியப்பா என்பவரின் மகன் அருண் பாஸ்கர் என்பவரிடம், ஏதேனும் தொன்மையாக கோயில் சிலைகள் தங்கள் வசம் உள்ளதா என விசாரணை செய்தனர். அதற்கு அருண்பாஸ்கர், தனது தந்தை சாமியப்பன் வசம் தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாக தெரிவித்தார். அந்த சிலையை தற்போது தங்களது  வங்கி லாக்கரில் வைத்துள்ளதாக  கூறினார். பின்னர், அவரிடம், ”மரகத லிங்கம் சிலை,  அவரது  தந்தையின் வசம் எப்படி, யார் மூலமாக,  எப்பொழுது கிடைத்தது, வேறு யாராவது கொண்டு வந்து கொடுத்தார்கள்” என்பது குறித்து போலீசார் கேட்டனர். ஆனால் இந்த சிலை தொடர்பாக எவ்வித ஆவணங்களும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார் அருண்.




எனவே தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை விசாரணையின் பொருட்டு ஆஜர்படுத்துமாறு கேட்டபோது வங்கியில் இருந்து எடுத்து வந்து ஆஜர்படுத்தப்படுத்தினார். தஞ்சையில் மீட்கப்பட்ட  மரகதலிங்கம் ஏதேனும் கோவிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டது.  அதைத் தொடர்ந்து ஆய்வாளர் முருகேசன் கொடுத்த தனி அறிக்கையின் பேரில் 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ”தமிழகம் முழுவதும் திருட்டுப்போன  கோயில் சிலைகள் குறித்து ரகசியமாக கண்காணித்து வருகின்றோம். அது தொடர்பாக, சிலை திருட்டில் ஈடுபட்டவர்களை கண்காணித்து வருகின்றோம். அதன் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசியமாக தகவல் வந்ததின் பேரில், கடந்த சில நாட்களாக அந்த வீட்டை நோட்டமிட்டோம்.




பின்னர், வீட்டிற்குள் சோதனையிட சென்றபோது, சாமியப்பன் மகன் அருண் பாஸ்கர் மட்டும் இருந்தார். அவரிடம் விசாரணை செய்தபோது, தனது தந்தையிடம் விலை மதிக்கமுடியாத வகையில், மிகவும் தொன்மையான 8 செ.மீ உயரத்தில், 530 கிராம் எடை கொண்ட மரகத லிங்கம் இருப்பதாக கூறினார். வங்கி லாக்கரில் இருப்பதாக தெரிவித்ததால், அந்த சிலையை மீட்டுள்ளோம். தற்போது சென்னையிலுள்ள சிலை திருட்டு தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். வரும் திங்கட்கிழமை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளோம். நீதிபதி உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார்.