Chennai Book Fair: காணக்கிடைக்காத படைப்புகள்.. 1000 அரங்குகளோடு சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்..!

எழுத்தாளர்களின் படைப்புகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

Continues below advertisement

புத்தக பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது. 

Continues below advertisement

எழுத்தாளர்களின் படைப்புகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இங்கு குழந்தைகளுக்கான சிறுகதைகள் தொடங்கி, நாவல்கள், இலக்கிய நூல்கள், பிற மொழி படைப்புகள், வரலாற்று புதினங்கள் என அள்ள அள்ள குறையாத அமுத சுரபி போல புத்தகங்கள் கிடைப்பதால், கண்காட்சி தொடர்பான அறிவிப்பு வந்தாலே புத்தக பிரியர்கள் குஷியாகி விடுவார்கள். 

அந்த வகையில் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சியானது நடத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும்  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வரும் புத்தக கண்காட்சி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி 47வது புத்தக கண்காட்சி  இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது. 

மாலை 4.30 மணிக்கு இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதால் புத்தக வாசிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான படைப்புகளை எளிதாக பெறுவதற்கு வசதியாக இருக்கும். சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியானது வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கண்காட்சி நடைபெறும் இடத்தில் தினமும் மாலையில் எழுத்தாளர்களுடனான உரையாடல், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறும். ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறு படைப்பாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதும், சிறந்த பதிப்பாளர், நூலகர் ஆகியோருக்கு பபாசி விருதும் வழங்க உள்ளார்.  

முன்னதாக சர்வதேச புத்தக கண்காட்சி தொடர்பான தகவலை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2024 ஆம் ஆண்டுக்கான சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்படும். அதிகமான அரங்குகளை அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு விருந்தினராக மலேசியா நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகளை அழைக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதேசமயம்  புத்தகங்கள் வாங்குபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது நெட்வொர்க் பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க் டவர்களும், பிஎஸ்என்எல் வைஃபை சேவையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மூலம் வரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு புத்தக கண்காட்சியை 50 லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement