சென்னையில் 46வது புத்தக கண்காட்சி நாளை பிரமாண்டமாக தொடங்க உள்ள நிலையில் புத்தக வாசிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை புத்தக கண்காட்சி
ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46வது புத்தக கண்காட்சி நாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கவுள்ளது. நாளை மாலை 5.30 மணிக்கு இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புத்தக கண்காட்சியின் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் தேவி பாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதை), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை) ஆகிய 6 பேருக்கு தலா ரூ.1 லட்சமும், முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும் முதலமைச்சர் வழங்குகிறார். மேலும் 9 பேருக்கு பபாசி சார்பில் விருதுகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
1000 அரங்குகள்
ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி தினமும் காலை 11 மணியில் இருந்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும். அதேசமயம் கடந்தாண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு கூடுதலாக 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் ஜனவரி 16,17,18 ஆகிய 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பங்கேற்க முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத்தாளர்கள்,தமிழர்கள் இந்த புத்தக கண்காட்சிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் வைரவன் மற்றும் செயலாளர் முருகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். கண்காட்சியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறும்.
கலைஞர் பொற்கிழி விருது இந்தாண்டு 100வது வழங்கப்பட உள்ளது. அதேசமயம் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதால் இந்தாண்டு தொல்லியல் அரங்குகள் அமைக்கப்படவில்லை. மேலும் 20 முதல் 40 புத்தகங்கள் வைத்திருப்பவர்களுக்கு மினி ராக் சிஸ்டம் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புத்தகங்கள் வாங்குபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது நெட்வொர்க் பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க் டவர்களும், பிஎஸ்என்எல் வைஃபை சேவையும் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூலம் வரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும், மற்றவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.10ம் வசூலிக்கப்படும். குழந்தைகளை கவரும் வகையில் பிரத்யேக அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு புத்தக காட்சியை 30 லட்சம் பேர் பார்வையிட்ட நிலையில், இந்தாண்டு 50 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.