தமிழ்நாட்டில் மேலும் 401 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


தமிழ்நாட்டில் புதிதாக 401 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 198 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக உயிரிழப்பு பதிவாகி வருகிறது. மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் 2,301 பேர் கொரோனாக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூர், அரபு நாடு மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வந்த 3 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,793 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அதில் 401 மாதிரிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டது.


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 735 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தொற்று பரவும் சதவீதம் என்பது செங்கல்பட்டில் அதிகமாக காணப்படுகிறது. செங்கல்பட்டில் 11.3%, கன்னியாகுமரி – 11.3%, சென்னை – 9.6 %, திருவள்ளூர் – 11.2%, கடலூர் – 10.3%, திருவண்ணாமலை – 9.4% என பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 87 வயது முதியவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 9 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுகாதார துறை அமைச்சர் கொரோனா தொற்றுக்கான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய போது, “இந்தியாவில் ஒமிக்ரான் வைகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. Xbb 1.16 மற்றும் ba2 என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய காணொளி கூட்டத்தில் அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள் மத்தியில் தமிழ்நாட்டின் நடவடிக்கைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்ட்வியா பாராட்டினார்” என குறிப்பிட்டார். 


மேலும், “தமிழ்நாட்டில் 24,061 கான்சன்ட்ரேடர், 13 ஆக்சிஜன் ஜெனரேட்டர், 260 ஆக்ஸிஜன் பிளான்ட் ஆகியவற்றுடன் 2067 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது பரவும் கொரோனா  உயிர் பறிக்கும் அளவிற்கு தீவிரம் இல்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 64,281 படுக்கைகள் தயாராக உள்ளது. தேவைப்பட்டால், அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் படுக்கைகளை உருவாக்கும் வசதி நம்மிடம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.