தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (11.04.2023) விளையாட்டு துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.சென்னையில் நடைபெறும் போட்டியை காண பாஸ் வழங்கப்பட வேண்டும் என்று கேட்ட எஸ்.பி.வேலுமணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் - விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை
விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி.” அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் போட்டியைக் காண பாஸ் வழங்கப்பட்டது. தற்போது, தி.மு.க. ஆட்சியிலும் 400 பாஸ் வழங்கப்பட்டது. ஆனால், எங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாஸ் வழங்க விளையாட்டுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துதர வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்
எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சர் உதயநிதியின் பதிலுக்கு சட்டப்பேரவையில் இருந்த அமைச்சர்களும் ரசித்து சிரித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகனின் பதிலை ரசித்து குலுங்கி சிரித்தார்.
இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,” கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் .போட்டிகளே நடைபெறவில்லை. அப்படி இருக்க, அ.தி.மு.க.-வினர் யாருக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. நான் சென்னையில் நடைபெறும் ஒவ்வொரு போட்டிக்கும் என்னுடைய சொந்த செலவில் தொகுதியில் இருந்து 150 கிரிக்கெட் வீரர்களுக்கு டிக்கெட் வாங்கி தருகிறேன். அவர்கள் நேரில் போட்டியை காண வேண்டும் என்று இப்படி செய்கிறேன்.
ஐ.பி.எல். போட்டியை நடத்துவது யார் தெரியுமா?
எஸ்.பி. வேலுமணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,” ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவது பி.சி.சி.ஐ. அது யாரென்றால், உங்களின் நெருங்கிய நண்பரான அமித்ஷாவின் பையன் ஜெய்ஷாதான் தலைவர். நாங்கள் சொன்னால் அவர் கேட்க மாட்டார். நீங்கள் சொன்னால் கேட்பார். நீங்கள் அவரிடம் பேசி அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஐந்து டிக்கெட் கொடுத்தால் போதும். நாங்கள் காசு கொடுத்துக் கூட வாங்கிக் கொள்கிறோம். இல்லை என்றால் நீங்கள் வேறு ஏதாவது கணக்கில் சேர்த்து விடுவீர்கள்” என பதிலளித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதலளித்த விதம் அனைவரையும் ரசிக்க செய்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் உதயநிதியின் பேச்சைக் கேட்டு சிரித்து ரசித்தனர். உதயநிதியின் ரசிகர்களும் இதை கொண்டாடி வருகின்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உரையின் காணொலிக்கான இணைப்பை கீழே காணலாம்